
குட்டை பாவாடை போட்டிருந்த இளம்பெண்களை பார்த்து, நடுத்தர வயது பெண் ஒருவர் பேசிய பேச்சு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அருகிலுள்ள குர்கானில் உள்ள மால் ஒன்றிற்கு இளம்பெண்கள் சிலர் சென்றுள்ளனர். அதில் ஒரு இளம்பெண் சிறிய பாவாடை அணிந்திருந்தார். இதனைப் பார்த்த, மாலில் இருந்த மற்றொரு நடுத்தர வயது பெண்மணி அங்கிருந்த 7 ஆண்களிடம் சென்று இந்தப் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுங்கள் எனக் கூறியதாக தெரிகிறது. அதாவது அவர்கள் அரைகுறை ஆடை போட்டு இருப்பதால், நீங்கள் பாலியல் தொல்லை கொடுக்கலாம் என இளைஞர்களிடம் அந்தப் பெண் பேசியதாக தெரிகிறது.
இதனையடுத்து அந்த நடுத்தர வயது பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட இளம்பெண்கள், ‘உடை அணிவது எங்கள் விருப்பம். நீங்கள் தலையிட தேவையில்லை. பேசியதற்காக மன்னிப்பு கேளுங்கள்’ என வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. மன்னிப்பு மட்டும் கேட்கவில்லையென்றால் உங்களை வீடியோ எடுத்து வைரல் ஆக்கிவிடுவோம் எனவும் இளம்பெண்கள் கூறுகின்றனர். மாலின் சிசிடிவி காட்சிகள் இருப்பதாகவும், அதனை வைத்து போலீசை அணுக உள்ளதாவும் அந்த இளம்பெண்கள் வீடியோவில் கூறுகின்றனர்.
மேலும், “ஒரு வயது குழந்தைகூட பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறதே அதற்கு ஆடையா காரணம்? சிறு குழந்தைகள் என்ன ஆடை போட்டுள்ளார்கள்” என்றும் அந்த இளம் பெண்கள் விடாமல் கேள்வி எழுப்பினர்.
ஆனால் அதற்குப் பதில் சொல்லும் அந்த நடுத்தர வயது பெண், “ எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதற்காக இந்தப் பெண்கள் அரைகுறை ஆடை அணிய விரும்புகின்றனர். ரொம்ப நல்லது. இப்படி ஆடை அணிபவர்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படலாம். நீங்கள் இப்பெண்களின் பெற்றோர்களா இருந்தால், அவர்களை கட்டுப்படுத்தி வையுங்கள். மரியாதையை கற்று கொடுங்கள்” எனக் கூறுகிறார்.
ஆனால் கடைசி வரை அந்த நடுத்தர வயது பெண் மன்னிப்பு கேட்கவில்லை. குட்டை பாவாடை போட்டிருந்த இளம்பெண்களை மிகவும் தரக்குறைவாக பேசிய அந்த நடுத்தர வயது பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வேகமாக இப்போது பரவி வருகிறது.