Published : 01,May 2019 04:06 AM
கட்சிக்கொடியுடன் செல்லும் வாகனங்கள் விதிகளை மதிப்பதில்லை : காவல்துறை பதில் மனு

கட்சிக்கொடி மற்றும் பெயர் பலகைகளுடன் செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை என்று சட்ட ஒழுங்கு காவல்துறை தலைவர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," இந்திய முழுவதும் தற்போது தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யபட்டு நான்கு வழிச்சாலை, 6 வழிச்சாலை என விரிவாக்கம் செய்யபடுகின்றன. இதில் நெடுஞ்சாலைகளை அமைப்பது, பயன்பாட்டிற்கு கொணர்வது மட்டுமே அரசின் பணி. பின்பு இந்த சாலைகளை பராமரிக்கும் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறது. அவர்கள் சுங்கசாவடிகளை அமைத்து சாலைகளை பராமரிப்பு செய்ய வேண்டும். முக்கியமாக சாலைகள் இணைப்பு பகுதியில் ஹைமாஸ் விளக்கு அமைப்பது, வளைவு பகுதியில் சிவப்பு எச்சரிக்கை விளக்கு பொருத்துவது, சாலைகள் நடுவே அரளிச் செடிகள் நடுவது ஆகிய பணிகளைச் செய்ய வேண்டும். ஆனால் இந்த பணிகள் முறையாக நடை பெறுவதில்லை. இதனால் தற்போது சாலை விபத்துக்கள் அதிகரித்துள்ளன.
மேலும் இருசக்கரம், மற்றும் நான்கு சக்கரவாகனங்களில் தடை செய்ய பட்ட LED பல்புகளும், அதிக அளவில் பொருத்தப்படுகின்றன. இதனாலும் விபத்து ஏற்படுகிறது.சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில், கடந்த 2016ல் 1,50,785 பேரும் 2017-ல் 1,47,913 பேரும் சாலை விபத்தில் உயிர் இழந்துள்ளனர் என்று கூறியுள்ளார். இவ்வாறு நடந்த விபத்துக்களில் இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. எனவே விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில சாலைகளை முறையாக பராமரிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அரசியல் கட்சியில் உள்ளவர்கள் தங்களது வாகனங்களில் கட்சி கொடிகட்டி கொள்வது தங்களது பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதி கொள்வது ஆகியவற்றிற்கு மோட்டர் வாகன சட்டப்படி அனுமதி இல்லை என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சட்ட ஒழுங்கு காவல்துறை தலைவர் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,"வாகனங்களில் அரசியல் கட்சிகளின் கொடி மற்றும் பதவிகளின் பெயரை எழுதி வைக்க மோட்டார் வாகன சட்டப்படி எவ்விதமான அனுமதியும் இல்லை. அவ்வாறு விதிகளை மீறி கட்சிக்கொடி மற்றும் பதவியின் பெயர் பலகைகளை வைத்திருந்தால் சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து அதிகாரிகளில், உதவி ஆய்வாளர் தரத்திற்கு குறையாத அலுவலர் அதனை அகற்றவும், அதிகபட்ச அபராதத்தை வசூலிக்கவும் உரிமை உண்டு என குறிப்பிடப்பட்டிருந்தது.
வாகனங்களில் கட்சிக்கொடி மற்றும் பதவிகளை எழுதி வைப்பதால் காவல்துறையினர் சந்திக்கும் சிரமங்கள் என்ன? என்ற கேள்விக்கு, இதுபோல கட்சி கொடி மற்றும் பதவிகள் வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை நிறுத்தி பரிசோதிக்க சில காவல்துறையினர் தயக்கம் காட்டுவதாகவும், அதன் காரணமாக வாகனங்கள் சோதனை செய்யப்படாதபோது, அது சட்டவிரோத மற்றும் சமூக விரோத செயல்களுக்கும் வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு, கட்சிக்கொடி மற்றும் பதவி பெயர் பலகைகளுடன் செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை,மேலும் சுங்கச்சாவடி கட்டணங்களை செலுத்தாமல் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் சண்டையிடும் சூழலும் உள்ளது" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.