
ஐபிஎல் போட்டிகளில் இருந்து விடைபெற்று தாயகம் திரும்பியுள்ள டேவிட் வார்னர், தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை நெருங்கியுள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பி வருகின்றனர். அந்த வகையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா சென்றுவிட்டார். அந்தவகையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் அதிரடி காட்டி 56 பந்துகளில் 81 ரன் எடுத்து அசத்தலாக கடைசி போட்டியை முடித்தார்.
இந்த ஐபிஎல் போட்டி வார்னருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த போட்டியாகும். இதுவரை 12 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 692 ரன்கள் குவித்து அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முதலில் இருக்கிறார். ஒரு சதம், 8 அரைசதம் அடித்துள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் கிட்டதட்ட அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். ஸ்டிரைக் ரேட் 143.86 ரன். அவருடைய பேட்டிங் சராசரி 69.20 ரன்.
உலகக் கோப்பைக்காக வார்னர் ஆஸ்திரேலியா திரும்பிவிட்டதால் இனிவரும் போட்டிகளில் அவர் விளையாடமாட்டார். தாயகம் திரும்பியுள்ள நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு குறுஞ்செய்தி ஒன்றினையும் உணர்வுபூர்வமாக பதிவிட்டுள்ளார். “சன்ரைசர்ஸ் ஹைதராபாத் குடும்பத்திற்கு என்னுடைய நன்றியை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. இந்த ஐபிஎல் தொடரில் மட்டுமல்ல, கடந்த ஆண்டிலும் எனக்கு சிறப்பான ஆதரவு அளித்தனர். அணியின் உரிமையாளர்கள், நிர்வாகிகள், சக வீரர்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் மனமார்ந்த நன்றி. இந்தத் தொடர் முழுவதும் நான் மகிழ்ச்சிகரமாக விளையாடினேன். இனிவரும் போட்டிகளில் அணி சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்” என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஐபிஎல் தொடரில் விளையாட வாட்சன் தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் வந்திருந்தார். ஒவ்வொரு போட்டியின் போதும் மைதானத்திலிருந்து அவரது மனைவியும், குட்டி மகளும் உற்சாகமாக ஆதரவு அளித்தனர். போட்டி முடிந்த பின்னர், மைதானத்தில் தன்னுடைய குழந்தையுடன் கொஞ்சி விளையாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். தன்னுடைய கணவரின் ஆட்டம் குறித்து வார்னரின் மனைவி ட்விட்டில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், வார்னருக்கு ஆட்டத்தில் இருக்கும் அர்ப்பணிப்பை புகழ்ந்துள்ளார்.
இந்த ஐபிஎல் தொடரில் இனிவரும் போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ள கே.எல்.ராகுல், ரஸல் உள்ளிட்டோருக்கு மட்டுமே வார்னரின் ரன்களை தாண்ட வாய்ப்புள்ளது. இருப்பினும், இரண்டாவது இடத்தில் உள்ள ராகுல் 520 ரன்கள் எடுத்துள்ளார். வார்னருக்கும் அவருக்கும் இன்னும் 170 ரன்கள் வித்தியாசம் உள்ளது. அதனால், இறுதிவரை ஆரஞ்சு கேப் வார்னரின் வசமே இருக்கும் என்று தெரிகிறது.