Published : 29,Apr 2019 08:59 AM

சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் போர்வையில் 12 கோடி வழிப்பறி 

A-team-Dressed-as-policemen-in-gold-theft-near-kanchipuram

காஞ்சிபுரம் அருகே சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் என்று கூறி நட்சத்திர ஹோட்டல் ஊழியரிடம் இருந்து 12 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் வழிப்பறி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் பொது மேலாளர் தயாநிதி. இவர் மதுரையில் இருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்த போது , பரனூர் சுங்கச்சாவடி அருகே பின்னால் துரத்தி வந்த கார் இவரை மடக்கியுள்ளது. அதிலிருந்து இறங்கிய 7 பேர் தாங்கள் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரி‌கள் எனக் கூறியதுடன் அடையாள அட்டையையும் காண்பித்துள்ளனர். 

அவர்கள் காரை சோதனையிட வேண்டும் என அவர்கள்கூற தயாநிதி அதற்கு சம்‌மதித்துள்ளார். 12 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் அடங்கிய 4 சூட்கேசுகள் தயாநிதி காரில் இருந்ததாக தெரிகிறது. உரிய ஆவணங்கள் இல்‌லாததால் நகைகளை பறிமுதல் செய்வதாக கூறிய 7 பேரும், கிண்டியில் உள்ள சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலகத்திற்கு வரும்படி தயாநிதியிடம் தெரிவித்துள்ளனர். 

மேலும் தயாநிதியின் கார் ஓட்டுநரை அழைத்துக் கொண்டு 7 பேரும் சென்றுவிட்டனர். சிறிது தூரம் சென்றவுடன் தயாநிதியின் ஓட்டுநரை காரிலிருந்து இறக்கி விட்ட அவர்கள், சூட்கேசுகளை எடுத்துச் சென்றதாக தெரிகிறது. கிண்டி சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலகத்திற்கு சென்ற தயாநிதி‌, சூட்கேசுகள் குறித்துக் கேட்டுள்ளார். அப்போதுதான் அவர் ஏமாற்றபட்டது தெரியவந்தது. சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு எனக்கூறியவர்கள் உண்மையான காவல்துறையினர் இல்லை என்பதை அறிந்து தயாநிதி அதிர்ச்சி அடைந்தார். 

இதுகுறித்து செங்கல்பட்டு வட்டார காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். சிலைக்கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர் எனக் கூறப்பட்ட சென்னையைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் கிரண் ராவுக்கு சொந்தமான நட்சத்திர விடுதியில்தான் தயாநிதி பணிபுரிகிறார். சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினர் ஏற்கனவே கிரணிடம் விசாரணை நடத்தி இருந்ததால் காரில் வந்தவர்கள் கூறியதை தயாநிதி நம்பியுள்ளார். 

கொள்ளை போன நகைகள் கிரணுக்கு சொந்தமானவை என்றும், கண்காட்சிக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டதும், அங்கிருந்து சென்னை எடுத்து வந்த போது கொள்ளை அடிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருதாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதி‌மானி தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்