Published : 27,Apr 2019 10:43 AM

“தனியாக வழக்கை எதிர்த்து போராடுகிறேன்”- மோடி ஹெலிகாப்டரை சோதனையிட்ட அதிகாரி

---Fighting-this-case-in-the-dark-----IAS-officer-who-checked-PM-Modi---s-chopper

நாடாளுமன்றத் தேர்தலுக்காக பிரதமர் மோடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக ஏப்ரல் 16ஆம் தேதி அவர் பரப்புரைக்காக ஒடிசா மாநிலத்தின் சாம்பல்பூர் சென்றிருந்தார். அப்போது அவர் சென்ற ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். 

பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்தும் இந்தச் சோதனை நடைபெற்றது. இதனையடுத்து பிரதமர் மோடி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தார். இதனையடுத்து சாம்பல்பூர் தொகுதியின் தேர்தல் பார்வையாளராக முகமது மொஹ்சினை தேர்தல் ஆணையம் பணியிடைநீக்கம் செய்தது.

இந்நிலையில் இதுவரை மவுனமாக இருந்த முகமது மொஹ்சின் தனது செயல் குறித்து தற்போது மனம் திறந்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவர், “நான் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை தான் பின்பற்றினேன். எந்தவித விதிமீறல்களிலும் நான் ஈடுபடவில்லை. அதனால் தான் என் மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரின் நகளை கேட்டிருக்கிறேன். ஆனால் தேர்தல் ஆணையம் இதுவரை அந்தப் புகாரின் நகளை என்னிடம் பகிரவில்லை. இந்த வழக்கை எவ்வித துணையும் இன்றி தனியாக நான் எதிர்கொள்கிறேன்.

அத்துடன் நான் 22ஆண்டுகளாக அரசு பணியில் உள்ளேன். எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் இல்லை. ஒரு போதும் சட்டத்தை மீறி நான் செயல்பட்டதே இல்லை. மேலும் பிரதமர் மோடியின் கூட்டம் நடைபெற்ற இடத்தில் நான் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே இருந்தேன். அதேபோல நான் ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. என்னிடம் இதுகுறித்து துணை தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்டார். நான் அவரிடம் விளக்கமும் அளித்தேன். எனினும் அன்று இரவு என்னை பணியிடை நீக்கம் செய்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக விதிகளை மீறி மோடியின் ஹெலிகாப்படரை சோதனை செய்ததாக கர்நாடகா மாநிலத்தின் ஐஏஎஸ் அதிகாரி முகமது மொஹ்சின் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து மத்திய அரசு பணியாளர் தீர்ப்பாயத்திடம் பணியிடை நீக்கம் குறித்து வழக்கு தொடர்ந்தார். 

இதற்கு தேர்தல் ஆணையம் மற்றும் முகமது மொஹ்சின் ஆகியோர் விளக்கம் அளிக்க தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் மொஹ்சினின் பணியிடை நீக்கத்தை திரும்ப பெற்றது. அத்துடன் கர்நாடகா மாநில அரசை அவர் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்