
இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல இடங்களிலும் கோடை மழை ஆங்காங்கே பரவலாக பெய்து வருகிறது. சில தென் மாவட்டங்களில் மழை சற்று அதிகமாகவே பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இதுவரை மழை இல்லை. ஆனால் சில நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
இந்நிலையில் இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது, தொடர்ந்து 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து புயலாக மாறும். அந்த புயலுக்கு ஃபனி (FANI) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் வரும் 30ஆம் தேதி தமிழகம்-ஆந்திரா கடற்கரையை ஓட்டி உள்ள பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும், அப்போது 90-100 கி மீ வேகத்தில் காற்று வீசம் எனவும் வானிலை ஆய்வாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் தமிழகம் மற்றும் ஆந்திர பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்றும் மீனவர்கள் இன்று முதல் வங்ககடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.