Published : 24,Apr 2019 09:58 AM
அழகிரி மகன் துரை தயாநிதியின் 40 கோடி சொத்துகள் முடக்கம்

கிரானைட் முறைகேடு விவகாரத்தில், மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சென்னை, மதுரையிலுள்ள ரூ40 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடியுள்ளது.
மதுரை கீழவளவில் கிரானைட் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக தயாநிதி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, சட்டத்திற்கு புறம்பாக வரம்புமீறி கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக புகார்கள் எழுந்தன. இந்தப் புகார்கள் நீண்ட காலமாக நிலுவையிலிருந்து வந்தது. தயாநிதிக்கு எதிரான புகார் குறித்து அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.
கடந்த 2012ம் ஆண்டு துரை தயாநிதி மற்றும் அவரது நண்பர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு ஆதாரங்களை அமலாக்கத்துறை திரட்டி வந்தது. அதன் அடிப்படையில் தற்போது அவரது சொத்துக்களை முடக்கியுள்ளது. தற்போதைய அரசியல் சூழலிலும் துரை தயாநிதி மீதான நடவடிக்கையும் முக்கியத்துவம் பெறுகிறது.