Published : 22,Apr 2019 03:14 AM
மதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் அறைக்கு சென்ற விவகாரம்: மேலும் 3 பேர் சஸ்பெண்ட்

மதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் இருந்த அறைக்கு சென்ற விவகாரத்தில், பெண் தாசில்தாரை தொடர்ந்து மேலும் 3 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மக்களவை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள், மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இதன் அருகே ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று ஆவணங்களை நகல் எடுத்த விவகாரத்தில், கலால் வட்டாட்சியர் சம்பூர்ணம் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்தநிலையில் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக கலால் வரித்துறை பதிவறை எழுத்தர் சீனிவாசன், மதுரை மாநகராட்சி இளநிலை உதவியாளர் ராஜபிரகாஷ் மற்றும் மாநகராட்சி துப்புரவு பணியாளர் சூர்யபிரகாஷ் ஆகிய 3 பேரையும் விசாரணைக்கு பின் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான நடராஜன் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இதற்கு காரணமான கலால்வரித்துறை உதவி ஆணையரும், மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான குருசந்திரனிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.