
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது கூறப்பட்டுள்ள புகார் ஒட்டுமொத்த நீதித் துறையை இழிவு படுத்துவதற்கான முயற்சி என்றும் பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.
நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, உச்சநீதிமன்றத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியது தற்போது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. இப்புகார் தொடர்பாக விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் அருண் மிஷ்ரா மற்றும் சஞ்சீவ் கன்னா அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தச் சிறப்பு அமர்வின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய நீதிபதி ரஞ்சன் கோகாய், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்ததுடன் தலைமை நீதிபதி அலுவலகத்தை முடக்க சதி நடப்பதாகவும் இதன் பின்னால் பெரிய சக்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் தலைமை நீதிபதி மீது கூறப்பட்டுள்ள புகார் ஒட்டுமொத்த நீதித் துறையை இழிவு படுத்துவதற்கான முயற்சி என்றும் பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தாங்கள் தலைமை நீதிபதிக்கு ஆதரவாக இருக்கப் போவதாகவும் பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஸ்ரா கூறியுள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மை அல்லது பொய் எதுவாக இருந்தாலும் இவ்விஷயம் மிகவும் தீவிரமானதுதான் என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் விகாஸ் சிங் தெரிவித்துள்ளார்.
பெண்ணின் புகார் குறித்து மூத்த நீதிபதி தலைமையில் விசாரித்து குறித்த காலத்திற்குள் உண்மையை கண்டறிய வேண்டும் என்றும் விகாஸ் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.