Published : 20,Apr 2019 02:37 AM
பொன்னமராவதி மோதல்: 1000 பேர் மீது வழக்கு!

பொன்னமராவதி மோதல் தொடர்பாக ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் நிலையத்தில் நேற்று ஒரு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த இருவர் எங்கள் சமுதாய மக்களை இழிவு படுத்தி வாட்ஸ் ஆப்பில் பேசியதாகவும், அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சுமார் 500 பேர் புகார் அளித்தனர். அப்போது கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தங்கள் சமூகம் குறித்து அவதூறாகப் பேசியவர்களை கைது செய்யக்கோரி அந்த சமூகத்தினர் போராட்டத்தில் குதித்தனர்.
அவர்களுடன் புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி அவதூறாகப் பேசியவர்கள் கைது செய்யப்படுவர் என அவர் உறுதியளித்தார். அதனை ஏற்று போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொன்னமராவதிக்கு வரும் சாலைகள் அனைத்திலும் பனைமரம் உள்ளிட்ட மரங்களை வெட்டிப்போட்டு தடை ஏற்படுத்தினர். வன்முறை சம்பவங்களும் ஆங்காங்கே நடந்ததால் பொன்னமராவதி நகரில் கடைகள் அடைக்கப்பட்டன. வன்முறை சம்பவங்கள் தொடர்ந்ததை அடுத்து பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.
இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்டதாக ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டதால், பொன்ன மராவதி முழுவதும் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்றும் பேருந்துகள் அங்கு ஓடவில்லை. தொடர் போராட்டத் தைத் தடுக்க சுமார் 1,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.