Published : 27,Apr 2017 06:22 AM

பிரமாண்ட பட்ஜெட்களில் இந்திய சினிமா: சாத்தியமா பிசினஸ்?

indian-cinema-in-giant-budget

இந்திய சினிமாவில் வழக்கமாக இந்தி படங்கள் மட்டுமே, நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும். இதற்கு பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம். அந்த படங்களுக்கான சந்தை உலகம் முழுவதும் உள்ளதால், போட்ட பட்ஜெட்டை விட அதிகமாகவே அந்தப் படங்கள் வசூலித்துவிடும். தென்னிந்திய மொழிகளில் எடுக்கப்படும் படங்களுக்கு மார்க்கெட் அதிகமாக இல்லை என்பதால் குறிப்பிட்ட பட்ஜெட்டிலேயே படங்களை தயாரித்து வருகின்றனர்.

ரூ.50 கோடி, ரூ.60 கோடி பட்ஜெட்டையே பிரமாண்டம் என கருதி வந்த தமிழ் சினிமாவுக்கு, ரஜினியின் ’எந்திரன்’ படம் ரூ.130 கோடியில் தயாராகி ஆச்சரியத்தைக் கொடுத்தது. இந்தப் படம் 450 கோடி வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அதிகப் பட்ஜெட்டில் படங்களை உருவாக்கும்போக்கு தென்னிந்திய மொழிகளில் அதிகரிக்கத் தொடங்கியது. ராஜமவுலி இயக்கிய பாகுபலி படம், ரூ.180 கோடியில் உருவானது. இந்தப் படம் 650 கோடி வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகமாக ரூ.250 கோடியில் உருவாகியுள்ள இந்தப் படம் நாளை வெளியாகிறது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ’2.ஓ’ படத்தின் பட்ஜெட், ரூ.450 கோடி! அடுத்து மகாபாரத கதையை மையைமாக வைத்து மோகன்லால் நடிக்கும் படம் ஒன்றை ஆயிரம் கோடி ரூயாப் பட்ஜெட்டில் தயாரிக்க இருக்கிறார்கள். நூறு கோடிகளுக்கு மேலான பட்ஜெட்டில் படமாக்கப்படுவது இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. இவ்வளவு கோடியில் படமாக்கினால், அதற்கான பிசினஸ் எப்படி அமையும்?

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட், ராஜூ மகாலிங்கத்திடம் கேட்டபோது, ‘கதையின் தேவைக்கேற்பதான் பட்ஜெட் தீர்மானிக்கப்படுது. ஒரு மாநிலத்துக்குள் வெளியிட வேண்டிய படத்துக்கு அதிக பட்ஜெட் செலவழிக்க முடியாது. ஒரு படம் தமிழ்நாட்டுல எவ்வளவு கலெக்ட் பண்ணுமோ, அப்படித்தான் பட்ஜெட்டை பயன்படுத்த முடியும். அதிக பட்ஜெட்னா, மற்ற மொழிகளையும் குறி வைத்துதான் படம் பண்ண வேண்டியிருக்கு. அதுக்கு ஏற்ற நடிகர், நடிகைகளை பயன்படுத்தணும். ஒரு படத்தை ஒரு ரசிகன், ஒரு முறைதான் பார்ப்பான். அவன் இன்னொரு முறை பார்க்கணும்னா, அதைத் தாண்டி படத்துலயும் ஏதாவது இருக்கணும். 2.0 படத்தை பொறுத்தவரை அதை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி தவிர வேற, சில மொழிகளில் வெளியிடவும் திட்டம் வச்சிருக்கோம்’ என்கிறார்.

சினிமா விமர்சகரும் புளு ஓசன் பிலிம் மற்றும் டெலிவிஷன் அகாடமி (பாஃப்டா) வின் நிறுவனருமான டி.தனஞ்செயனிடம் கேட்டபோது, ’சினிமாவில் காம்பினேஷன் முக்கியம். ஷங்கர், ரஜினி காம்பினேஷனை நம்பி அதிக பட்ஜெட் செலவு பண்ணலாம். ஒரு மொழியை மட்டும் கவனத்துல வச்சு அதிக பட்ஜெட் செலவு பண்ண முடியாது. தென்னிந்திய மொழிகளோட, இந்தியையும் சேர்த்தாதான், போட்ட முதல் கைக்கு கிடைக்கும். பெரிய ஹிட்டான, நல்ல படம்னு எல்லாரலயும் பாராட்டப்பட்ட ஆமிர்கானின் ’தங்கல்’ , 385 கோடிதான் வசூல் பண்ணியிருக்கு. மோகன்லால் நடிக்கும் படத்துக்கு ஆயிரம் கோடி பட்ஜெட்டுனா, அதை ஆங்கிலத்துலயும் எடுத்து உலகம் முழுவதும் வெளியிடப் போறாங்க. அதனாலதான் அந்த பட்ஜெட்’ என்கிறார்.

ஆயிரம் கோடி பட்ஜெட்டில் இந்திய படம் உருவானால் அது அதிக ரிஸ்க் என்கிறார் மூத்த சினிமா பத்திரிகையாளர் ஸ்ரீதர் பிள்ளை. ‘ரஜினி, ஷங்கர் காம்பினேஷனுக்கு இந்திய மொழியில் பலத்த வரவேற்பு இருக்கு. அவர்கள் காம்பினேஷன் எவ்வளவு பட்ஜெட்டையும் தாங்கும். அதற்கான புரமோஷனும் தேவை. ஆயிரம் கோடி பட்ஜெட்டில் இந்திய படம் ஒன்றை எடுத்தால், அது ரிஸ்க். அனைத்து இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்தில் எடுத்தாலுமே அது அவ்வளவு வசூலிக்குமா என்பது சந்தேகம்தான்’ என்கிறார் அவர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்