Published : 16,Apr 2019 11:24 AM
வன்கொடுமை வழக்கிற்கு சிறப்பு நீதிமன்றங்கள்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழகம் முழுவதும் வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்படும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசும் உயர்நீதிமன்றம் பதிவாளரும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க விழுப்புரம் மற்றும் சிவகங்கையில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல பிற மாவட்டங்களிலும் இந்தச் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உத்தரவிடக் கோரி, மாற்றம் இந்தியா அமைப்பின் சார்பில் 2012 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது குறித்து உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு அறிவுறுத்தி, திண்டுக்கல், காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட 15 இடங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தமிழக அரசுக்கு கருத்துருக்கள் அனுப்பப்பட்டன.
அதன்படி, 2016-17ம் ஆண்டு முதல் 2019-20ம் ஆண்டுக்குள் 16 இடங்களில் மூன்று கட்டங்களாக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க 2017 ஏப்ரலில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. முதற்கட்டமாக திண்டுக்கல், ராமநாதபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், புதுக்கோட்டையில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,2 ஆண்டுகளான நிலையிலும், இந்த நீதிமன்றங்கள் இன்னும் தொடங்கப்படவில்லை எனவும், அரசாணையின்படி சிறப்பு நீதிமன்றங்களை துவங்க உத்தரவிடக் கோரியும் மாற்றம் இந்தியா அமைப்பின் ஏ.நாராயணன் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஏப்ரல் 26ம் தேதிக்குள் தமிழக அரசுக்கும், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.