
வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதை தடுக்கும் வகையில், புதுச்சேரி மாநிலத்தில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்துடன் இணைந்து, புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் வருகிற வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் டி.அருண் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தலை நியாயமாக நடத்தும் வகையிலும், வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதை தடுக்கும் வகையிலும், இன்று மாலை 6 மணி முதல் 19-ஆம் தேதி காலை 6 மணி வரை 60 மணி நேரத்துக்கு புதுச்சேரி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த தடைக்காலத்தின் போது, 5 மற்றும் அதற்கு மேற்பட நபர்கள் பொது இடங்களில் கூடுவதற்கும், ஆயுதங்கள், பேனர்களை எடுத்துச் செல்வதற்கும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக, டி.அருண் தெரிவித்துள்ளார்.