“10 வழிச்சாலை தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு” - ராஜேந்திர பாலாஜி கலகல
எட்டு வழிச்சாலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
எட்டு வழிச்சாலை தொடர்பாக அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்து தீர்ப்பளித்தது. அத்துடன் அதற்காக கையப்படுத்தப்பட்ட நிலங்களை உரிமையாளர்களிடம் 8 வாரங்களுக்குள் திரும்பக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த அவசரகதியில் மாநில அரசு செயல்பட்டுள்ளதாகவும், அதற்கு கடும் கண்டனத்தையும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “உயர்நீதிமன்றம் தடை விதித்தால் மேல்முறையீடு செய்வார்கள். அரசு சார்பில் மேல்முறையீடு செய்வார்கள். சாலை வசதி என்பது இன்று சமூகத்தினுடைய கட்டமைப்புக்கும், தொழில்துறை வளர்ச்சிக்கும் மிக அவசியம். அதற்காகத் தான் முதலமைச்சர் பழனிசாமி ‘இந்தப் பத்து வழிச்சாலை’ திட்டத்தையே கொண்டு வந்தார். மற்றபடி, இதில் எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது.
விவசாயத்திற்கு எத்தனையோ இடங்கள் இருக்கிறது. அங்கு விவசாயம் செய்யலாம். விவசாயத்திற்கு பாதிக்கும் அளவிற்கு எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. அவர்களுக்கு தகுந்த இழப்பீடும் கொடுக்கின்றார்கள். எனவே இதுதொடர்பாக என்ன செய்யலாம் என அனைத்துக் கட்சிகள் மற்றும் அதிகாரிகளை அழைத்துப்பேசி முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் முடிவு செய்வார்கள். அவர்கள் யாரும் பாதிக்காத அளவிற்கு தான் முடிவெடுப்பர்கள்.