Published : 08,Apr 2019 05:44 AM

“ஸ்டெர்லைட் பற்றி பேசுங்கள்” - ஓ.பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பிய நபர்

OPS-Election-campaign-at-Thoothukudi

தேசிய ஜனநாயக கூட்டணியின் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். 

அப்பொழுது பேசிய அவர், நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியினுடைய ஆட்சியில் மக்களுக்கு நலத் திட்டங்கள் சிறப்பாக செய்து கொடுக்கப்பட்டது. மக்கள் அதனை எண்ணிப் பார்த்து இந்தத் தேர்தலில் ஒரு எஜமானர்களாக, நீதிபதிகளாக இருந்து வாக்களிக்க வேண்டும். 

பதவி ஏற்றது முதல் தற்போது வரையில் அதிமுக ஆட்சியில்தான் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வந்த 4 கிராம் தங்கத்தை 8 கிராமாக ஆக உயர்த்தி வழங்கியது அதிமுக அரசுதான். அதேபோல மகப்பேறு கால திட்ட உதவி தொகையை 12 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரமாக உயர்த்தி வழங்கியுள்ளோம். இது தவிர படித்த இளைஞர், இளம் பெண்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை திட்டத்தையும் அதிமுக அரசுதான் சிறப்பாக செயல்படுத்தியது. 

மாநிலத்தில் நல்ல ஆட்சி நடைபெற வேண்டுமென்றால் அதற்கு உறுதுணையாக மத்தியிலும் வலிமையான ஆட்சி இருக்க வேண்டும். திமுகவின் ஆட்சி காலத்தில் எந்த ஒரு வளர்ச்சித் திட்டங்களும், மக்கள் நலத் திட்டங்களும் தமிழ்நாட்டில் செயல்படுத்தவில்லை. திமுக ஆட்சியில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்தார்கள். அரசு பணம் ரூ. 40 ஆயிரம் கோடியை அவர்கள் திட்டத்திற்கு தான் செலவழித்தார்களா? அல்லது அவர்களின் வீட்டுக்கு கொண்டு போனார்களா என்பது தற்போது வரை தெரியவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு இருந்த தடையை நீக்கியது இந்த அரசுதான். அதற்கு உதவி செய்தது மத்தியில் இருக்கக்கூடிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு.

திமுகவினர் வன்முறை கலாச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை தமிழர் விஷயத்தில் ஒன்னரை லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்ட போது இந்தியாவிலிருந்து நாடாளுமன்ற குழுவினர் இலங்கைக்கு சென்றனர். அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்தனர். அந்தக் குழுவில் திமுகவின் கனிமொழியும் இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். அங்கு சென்று அவர் ராஜபக்ஷே அளித்த விருந்து உணவை சாப்பிட்டுவிட்டு, அவர் அளித்த பரிசினை மட்டுமே பெற்றுக் கொண்டு வந்தார். அவர்தான் தற்பொழுது தூத்துக்குடியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

மத்தியிலே பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும். மாநிலத்திலே அதிமுக அம்மாவின் அரசு தொடர வேண்டும். மத்தியிலும் மாநிலத்திலும் வலிமையான ஆட்சி அமைந்தால் தான் நாடு சுபிட்சமாக இருக்கும். அதற்கு  நல்லாட்சி யார் அமைப்பார்கள் என்பதை மக்கள் நினைத்துப் பார்த்து இந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள், எஜமானர்களாக, நீதிபதிகளாக இருந்து இரட்டை இலை ஆதரவு பெற்ற சின்னமான தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜனுக்கு ஆதரவாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பேசிக்கொண்டிருந்த போது பொதுமக்களிலிருந்து ஸ்டெர்லைட் ஆலை குறித்து பேசுமாறு குரல் எழுப்பினர். அப்போது கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் அவ்வாறு கூறிய நபரை ஓரங்கட்டுங்கள் அவரை அங்கிருந்து அப்புறப்படுங்கள் குரல் எழுப்பினர். இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்தும், துணை முதலமைச்சர் தூத்துக்குடியின் பிரச்னையான ஸ்டெர்லைட் ஆலை குறித்து பிரச்சாரத்தின் முடியும் வரையில் எதுவும் பேசவில்லை. இது தூத்துக்குடி மக்களுக்கும், பொதுமக்கள் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.  

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்