Published : 06,Apr 2019 12:42 PM
பஞ்சாபிற்கு 161 ரன் இலக்கு - 5 ரன்னில் அவுட் ஆன கெயில்

பஞ்சாப் அணிக்கு எதிரக சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். சென்னை அணியில் வாட்சனும், டுபிளிசிஸும் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 56 ரன்கள் எடுத்தது.
வாட்சன் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர், சிறப்பாக விளையாடிய டுபிளிசிஸ் அரைசதம் அடித்தார். ஆனால், டுபிளிசிஸ் (54), ரெய்னா இருவரும் அஸ்வின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ரெய்னா 20 பந்துகளை சந்தித்து 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர், ராயுடு, தோனி ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ரன்ரேட் வேகம் குறைய தொடங்கியது.
18வது ஓவரில் இருந்து தோனியும், ராயுடுவும் அடித்து விளையாடினர். அதனால், சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 160 ரன்களை எட்டியது. தோனி 23 பந்தில் 37 ரன்களும், ராயுடு 15 பந்தில் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பஞ்சாப் அணி தரப்பில் அஸ்வின் மூன்று விக்கெட் சாய்த்தார். பஞ்சாப் அணிக்கு 161 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அணி 2 ஓவரில் 7 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டை பறிகொடுத்தது. கெயில் 5 ரன்னில் ஹர்பஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது பந்திலே மயங்க் அகர்வால் டக் அவுட் ஆனார்.