Published : 06,Apr 2019 02:29 AM

'பஞ்சாப்' அஸ்வினா, 'தமிழக' தோனியா? சேப்பாக்கத்தில் இன்று அனல் பறக்கும் மல்லுக்கட்டு!

Chennai-Super-Kings-vs-Kings-XI-Punjab-----Preview

ஐபிஎல் தொடரில் சென்னையில் இன்று நடக்கும் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

தனது முதல் 3 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற சென்னை அணி, முந்தைய லீக் ஆட்டத்தில் மும்பை அணியிடம் தோல்வி யைத் தழுவியது. சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், தோனி ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். தொடக்க ஆட்டக்காரர்கள் ராயுடு, வாட்சன் ஃபார்ம் சென்னை அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த நான்கு போட்டிகளில் ராயுடு எடுத்த ரன்கள், 28, 5, 1, 0. வாட்சன் எடுத்த ரன்கள் 0,44, 13, 5. இதனால் இன்றைய போட்டியில் ராயுடுவுக்கு பதிலாக தமிழக வீரர் முரளி விஜய்-க்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் காயம் அடைந்த பிராவோ, 2 வாரம் விளையாடமாட்டார் என்று சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி தெரிவித்துள்ளார். ஏற்கனவே வேகப்பந்துவீச்சாளர்கள் லுங்கி நிகிடி, டேவிட் வில்லே இல்லாத நிலையில் பிராவோவும் இல்லாதது சென்னை அணிக்கு பின்னடைவு.

இந்நிலையில் நிகிடிக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் கஜ்ஜலின் இன்றைய போட்டியில் களம் இறங்குவார் என்று தெரிகிறது.

தமிழக வீரர் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, ஒரு தோல்வி அடைந்துள்ளது. கடந்த போட்டியில் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் காயம் காரணமாக ஆடவில்லை. அவர் இன்றைய போட்டியில் ஆடுகிறார்.  

பஞ்சாப் அணியில் தமிழக சுழற்பந்துவீச்சாளர்கள் முருகன் அஸ்வின், வருண் சக்கரவர்த்தி இடம்பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது. வேகப்பந்து வீச்சில் முகமது ஷமி மிரட்டுவார்.  

இளம் ஆல்-ரவுண்டர் சாம் குர்ரன் கடந்த போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். இன்றைய போட்டியில் அவரும் சவாலாக இருப்பார். கே.எல்.ராகுல், கெய்ல், மயங்க் அகர்வால், சர்ப்ராஸ் கான், டேவிட் மில்லர் என அதிரடி பேட்ஸ்மேன்களும் அந்த அணியில் இருக்கிறார்கள்.

சேப்பாக்கம் மைதானத்தில் உள்ளூர் வீரர் அஸ்வின் தலைமையிலான அணியும் உள்ளூர் வீரராக மாறியுள்ள தோனி தலைமையிலான அணியும் மோதுவதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும். போட்டி இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.

இரு அணிகளும் இதுவரை 19 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 11 ஆட்டத்திலும், பஞ்சாப் அணி 8 ஆட்டத்தி லும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஐதராபாத்தில் இரவு 8 மணிக்கு நடக்கும் மற்றொரு போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-மும்பை இந்திய ன்ஸ் அணிகள் மோதுகின்றன. 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்