Published : 01,Apr 2019 01:44 PM

அரியலூர் மாணவி கொலை வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

Ariyalur-Student-Girl-Murder-Case---High-Court-Order

அரியலூர் மாணவி கொலை வழக்கு விசாரணையை 6 மாதங்களுக்குள் கீழமை நீதிமன்றம் முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

2016ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி அரியலூரில் மாணவி ஒருவர் மாயமானார். அதன்பின்னர் தேடப்பட்டு வந்த மாணவி, அழகுதுரை என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுதொடர்பாக மணிகண்டன் உள்ளிட்ட மூவரை ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தினர் கைது செய்தனர். ஆனால் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி மாணவியின் தாயார் ராஜாகிளி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இதற்கிடையே காவல்துறையினர் போக்சோ சட்டம், வன்கொடுமை தடைச் சட்டம், கொலை குற்றச்சாட்டு ஆகியவற்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கைதானவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ராஜாகிளி மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், “காவல்துறை சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கை வேறு அமைப்பு விசாரணைக்கு மாற்றுவதால் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை” என்று கூறி மனுவை முடித்து வைத்தார். 

அதேசமயம் வழக்கில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டையும் சேர்த்து, இறுதி குற்றப்பத்திரிக்கையை 2 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும் அடுத்த ஆறு மாதங்களுக்குள் விசாரணையை கீழமை நீதிமன்றம் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்