
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக நீதிமன்ற குற்றவியல் அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி கோரி, அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி அரசு தலைமை வழக்கறிஞரிடம் மனு அளித்துள்ளார்.
அதிமுக தென் சென்னை - தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவின் இணை செயலாளர் திவாகர், அரசு தலைமை வழக்கறிஞரிடம் அளித்துள்ள மனுவில், மார்ச் 27ஆம் தேதி தேனியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை விமர்சித்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தை எப்படியோ சரி கட்டி, தங்களுக்கு சாதகமான தீர்ப்பை அதிமுகவினர் பெற்றுள்ளனர் எனப் பேசியதற்கான வீடியோ ஆதாரத்தையும், அடுத்த நாள் அந்தப் பேச்சு முரசொலியில் பிரசுரம் ஆனதற்கான சான்றையும் அரசு தலைமை வழக்கறிஞரிடம் சமர்ப்பித்துள்ளார். ஸ்டாலினின் இந்தப் பேச்சு நீதிபதிகள் மீதும், நீதிமன்றம் மீதும் நேரடியாக குற்றம் சுமத்துவது போல் உள்ளதோடு, அதன் மாண்பை சீர்குலைக்கும் வகையில் உள்ளதால், அவர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதியளிக்கும்படி மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
புகார்தாரர் திவாகர், குற்றச்சாட்டுக்கு ஆளான மு.க.ஸ்டாலின் ஆகியோரின் கருத்தை கேட்ட பின்னர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிப்பது குறித்து அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் முடிவெடுப்பார்.