Published : 29,Mar 2019 08:41 AM
ஐ போன் ட்விட்டருக்கு 'டார்க் மோட் லைட்ஸ் அவுட்' ஆப்ஷன் அறிமுகம்!

ட்விட்டரை கண்ணுக்கு இதமாகவும், பேட்டரி சார்ஜை நீடிக்கும் விதமாகவும் பயன்படுத்தும் வகையில் ''டார்க் மோட் லைட்ஸ் அவுட்'' என்ற ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் முக்கியமான சமூக வலைதளங்களாக ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவை இருக்கின்றன. நடிகர், நடிகைகள் தொடங்கி பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வரை இந்தச் சமூக வலைத்தளங்களில் இயங்கி வருகின்றனர். இந்த ஒவ்வொரு சமூக வலைதளத்திற்கு கோடிக்கணக்கான பயன்பாட்டாளர்கள் உள்ளனர்.
அந்த வகையில் ட்விட்டர் என்பது மிகவும் முக்கியமான சமூக வலைதளமாக இருந்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் தங்களது எண்ணங்களை பதிவிட ட்விட்டர் ஒரு சிறந்த களமாக உள்ளது. ட்விட்டர் பயனாளர்கள் தங்களின் தேவைகளை அவ்வப்போது ட்விட்டர் நிர்வாகத்திடம் கோரிக்கையாக முன்வைக்கின்றனர். ட்விட்டரில் எடிட் வசதி வேண்டுமென்பது நீண்டநாள் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால் ட்விட்டர் நிர்வாகம் எடிட் ஆப்ஷனை கொண்டு வர யோசிக்கிறது.
அதே போல் பேட்டரி சார்ஜை நீண்ட நேரத்துக்கு நீடிக்க வைக்கும் விதமாக 'டார்க் மோட்' அம்சம் வேண்டுமென்ற கோரிக்கை அவ்வப்போது முன்வைக்கப்பட்டது. ட்விட்டரின் 'நைட் மோட்' ஆப்ஷன் ஏற்கெனவே இருக்கிறது. ஆனால் இந்த டார்க் மோட் ஆப்ஷன் கொண்டு வரப்பட்டு அதோடு சேர்த்து லைட்ஸ் அவுட் (lights out) முறையும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதி முதற்கட்டமாக ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளத்தில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி விரைவில் ஆண்ட்ராய்டு மற்றும் வெப் வர்ஷனில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. டிவிட்டரில் வழங்கப்பட்டுள்ள ''டார்க் மோட் லைட்ஸ் அவுட்'' அம்சம் நீலம் மற்றும் கிரே நிறத்தில் கண்களுக்கு எவ்விதமான அழுத்தத்தையும் வழங்காத வகையில் வழங்கப்பட்டுள்ளது.
Settings and Display பகுதிக்கு சென்று Display and Sound என்ற மெனுவில் நுழைந்தால் டார்க் மோட்டை அக்டிவேட் செய்யலாம். அதன் கீழே இருக்கும் லைட்ஸ் அவுட் ஆப்ஷனையும் க்ளிக் செய்து கண்ணுக்கு இதமாக ட்விட்டரை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
It was dark. You asked for darker! Swipe right to check out our new dark mode. Rolling out today. pic.twitter.com/6MEACKRK9K
— Twitter (@Twitter) March 28, 2019