
சேலத்தில் அதிகாரிகள் நடத்திய வாகன தணிக்கையில் 73 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் சிக்கியுள்ளன.
தேர்தல் நேரம் என்பதால் பணப்பட்டுவாடாவை தடுக்க தமிழகம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் சேலம் கொண்டலாம்பட்டியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், அவ்வழியே வந்த வேன் ஒன்றை தடுத்து நிறுத்தினர். அதில், துப்பாக்கி ஏந்திய இரண்டு பாதுகாவலர்கள் பாதுகாப்புடன், நகைகள் கொண்டு செல்லப்பட்டது ஆய்வில் தெரியவந்தது.
மும்பையிலிருந்து மதுரை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியிலுள்ள கடைகளுக்கு நகைகள் கொண்டு செல்லப்படுவதாக வேனில் இருந்தவர்கள் தெரிவித்தனர். அதற்கான ஆவணங்களையும் அவர்கள் காண்பித்தனர். எனினும் நகைகள் மற்றும் அதற்கான ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள் அவற்றை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும், அவை உண்மை என்பது உறுதி செய்யப்பட்டவுடன் நகைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் சேலம் ஆட்சியர் ரோகிணி தெரிவித்தார்.