Published : 24,Apr 2017 07:05 AM
யாருகிட்ட? சிசிடிவியால் சிக்கினார் எஸ்கேப் கைதி

சென்னையில் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கைதி பிடிபட்டார்.
திருவொற்றியூர் அம்பாள் நகரைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரன். இவர் கடந்த 2010-ம் ஆண்டு திருவொற்றியூரைச் சேர்ந்த பேபியம்மாள் என்ற ஓய்வுபெற்ற ஆசிரியரை 10 பவுன் நகைக்காக கொலை செய்தார். இதுதொடர்பான வழக்கில் பொன்னேரி உதவி நீதிமன்றம் 2012-ல் கோட்டீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவருக்கு கண் நோய் ஏற்பட்டது. இதனால் ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீஸார் நேற்று அழைத்து வந்தனர். அவருடன் மேலும் 19 கைதிகளும் சிகிச்சை பெற வந்தனர். அனைவருக்கும் கைதிகள் வார்டில் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. கோட்டீஸ்வரனை அழைத்து வந்த போலீஸ்காரர், பெண் போலீஸ் ஒருவரிடம், ’கோட்டீஸ்வரனை பார்த்துக்க வந்திடறேன்’ எனச் சொல்லிவிட்டுச் சென்றார். அவரது அருகில் மற்றொரு கைதியும் சிகிச்சைக்காக காத்திருந்தார். இதை தவறுதலாக புரிந்துகொண்ட பெண் போலீஸ், கோட்டீஸ்வரனை கவனிக்கவில்லை. இதை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தப்பிய கைதியை பிடிக்க, 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அவரை தேடி வந்தனர். கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் கோட்டிஸ்வரன் சுற்றித் திரிவது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர். விசாரணையில், ரயில் மூலம் தனது சகோதரி வீட்டுக்கு அவர் செல்லவிருந்தது தெரியவந்தது.