Published : 26,Mar 2019 12:51 PM
“தோல்வி பயத்தால் கமல் போட்டியிடவில்லை” - ராஜேந்திர பாலாஜி

தோல்வி பயம் காரணமாகவே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடவில்லை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், தென்காசி தொகுதி வேட்பாளரும், புதிய தமிழகம் கட்சியின் தலைவருமான கிருஷ்ணாசாமிக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வேட்புமனு கட்டி சின்னம் ஒதுக்கிய பிறகு பதிவு செய்தால் சின்னம் கொடுக்க மாட்டார்கள். அமமுக எல்லா தொகுதியிலும் வாபஸ் வாங்கிடுவார்கள். அமமுக கட்சியில் யார் இருக்கிறார்கள், அங்கு உள்ளவர்கள் தாய் கழகத்தில் வந்து சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அமமுக அமைப்பே கிடையாது. அண்ணா திமுக தான் பெரிய இயக்கம். டி.டிவி தினகரன் அண்ணா வா, பெரியாரா, எம்.ஜி.ஆரா, இல்லை அம்மாவா? அம்மா வழியில் வந்த எடப்பாடி, ஓ.பி.எஸ் அவர்களும் சிறப்பாக இயக்கத்தை நடத்தி வருகிறார்கள். அவர்களை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
டிடிவி தினகரன் பொய்யாக சொல்லுகிறார். ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற அவரது திட்டம் நடக்காது. தினகரனின் செயல் அவரது குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் பிடிக்கவல்லை. புதிய சின்னம் வாங்கி அதை விளம்பரம் செய்வது கடினம், அதனால் இரட்டை இலை சின்னத்தில் கிருஷ்ணசாமி நிற்கிறார். இரண்டு இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெறுவார். கமல்ஹாசன் தேர்தலுடன் அப்படியே சென்று விட வேண்டியதுதான். தமிழ்நாட்டில் அவருக்கு வேலை இல்லை. அவர் ஆரம்பித்த கட்சி சிரிப்பு படம் போன்றது. தோல்வி பயம் காரணமாகவே கமல் தேர்தலில் போட்டியிடவில்லை” என்று கூறினார்.