
மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தல் இரண்டிலும் அதிமுகவுக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட சமத்துவ மக்கள் கட்சி தயாராகி வந்தது. இந்நிலையில் கட்சியின் முடிவை திடீரென மாற்றிய சரத்குமார், வரும் மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் இரண்டிலும் அதிமுகவுக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “ இரு தினங்களுக்கு முன் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓபிஎஸ் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சந்தித்து அதிமுகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். தனித்து போட்டி என்ற முடிவை மாற்றிக்கொள்ளவும் வலியுறுத்தினர். இதனையடுத்து சமகவின் நிர்வாகிகளிடம் ஆலோசித்து அதிமுகவுக்கு ஆதரவு என முடிவெடுக்கப்பட்டுள்ளது. எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை தேர்தல் கோரிக்கையாக அதிமுகவிடம் வலியுறுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.