Published : 23,Mar 2019 03:02 PM
“பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்” - இஸ்லாமிய குடும்பத்தை தாக்கிய கும்பல்

ஹரியானாவின் குருகிராமில் இஸ்லாமிய குடும்பத்தினர் மீது 20 பேர் அடங்கிய கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹரியான மாநிலம் குருகிராமின் தம்சாப்பூர் கிராமத்தில் மோகமது சஜித் மற்றும் அவரது குடும்பமும் வசித்து வருகின்றனர். அவர்களின் வீட்டிற்கு ஹோலி தினத்தன்று விருந்தினர்கள் வருகை தந்துள்ளனர். இதனால் சஜித்தின் குழந்தைகள் வீட்டிற்கு அருகில் உள்ள காலியான இடத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சிலர் “நீங்கள் பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் விளையாடுங்கள் ” என்று கூறியதோடு, அவர்களின் வீடுகளுக்கும் சென்று கும்பலாக தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து சஜீத்தின் உறவினர் தில்ஷாத், “நாங்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வந்தனர். அவர்கள் எங்களிடம் நீங்கள் இங்கு கிரிக்கெட் விளையாடக் கூடாது என்று கூறி தாக்கினார்கள். அப்போது என்னுடைய மாமா சஜீத் அவர்களிடம் கேட்டப் போது அவர்கள் என் மாமா சஜீத் தாக்கிவிட்டு சென்றனர். அதன்பின்னர் 10 நிமிடங்களில் மீண்டும் அவர்கள் 25க்கும் மேற்பட்ட கும்பலுடன் வந்து தாக்கினார்கள்” எனத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அத்துடன் நேற்று இரவு ஒரு தாக்கியவர்கள் கும்பலில் ஒருவரை கைது செய்துள்ளனர்.