Published : 24,Apr 2017 02:25 AM

அடப்பாவமே! 49 ரன்னுக்கு ஆல் அவுட்: என்னாச்சு கோலி அணிக்கு?

virats-team-ousted-for-49-runs

ஐபிஎல் கிரிக்கெட்டில் வெறும் 49 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து பெங்களூர் அணி சுருண்டது.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் நேற்று மோதின. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணியில், வழக்கம் போல காம்பீரும் சுனில் நரேனும் களமிறங்கினர். பெங்களூரின் நேர்த்தியான பந்துவீச்சில் அந்த அணி விக்கெட்டுகளை தொடர்ந்து இழந்தது. நரேன் மட்டும் ஒரு சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் சேர்த்தார். பெங்களூர் தரப்பில் சாஹல் 3 விக்கெட் வீழ்த்தினார். நேகி, டி.மில்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். பத்ரீ, அரவிந்த், பின்னி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

அடுத்து ஆடிய பெங்களூர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தது. சந்தித்த முதல் பந்திலேயே கோலி ஆவுட் ஆக, அடுத்து வந்தவர்களும் அதிக நேரம் நிலைக்கவில்லை. அந்த அணியில் யாருமே இரட்டை இலக்க ரன்களை எட்டவில்லை. அந்த அணியின் அதிகபட்ச ரன், 8! மொத்தம் 49 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது அந்த அணி. 82 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி கண்டது. அந்த அணிக்கு இது 5 வது வெற்றி.

கொல்கத்தாவின் கோல்டர் நைல், வோக்ஸ், கிராண்ட்ஹோம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய கோல்டர் நைல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

பெங்களூர் அணி எடுத்த 49 ரன்களே ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி எடுத்த குறைந்த பட்ச ஸ்கோராகும். இதற்கு முன் 2009-ல் பெங்களூர் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி எடுத்த 58 ரன்களே குறைந்த பட்ச ஸ்கோராக இருந்தது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்