
போலியோ தடுப்பு விழிப்புணர்வுக்கு ஒத்துழைப்பு தர நடிகர்கள் தயார் என உயர்நீதிமன்றத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாமை முறையாகவும், தொடர்ச்சியாகவும் நடத்த உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த ஜான்சி ராணி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இம்மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், கிருபாகரன், சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், போலியோ முகாம் குறித்து போதுமான விழிப்புணர்வோ, விளம்பரங்களோ செய்யப்படுவது இல்லை என வாதிட்டார்.
இதையடுத்து பேசிய நீதிபதிகள், மக்களிடம் ஏற்கனவே நன்கு அறிமுகமாகியுள்ள நடிகர்கள் மூலமாக விழிப்புணர்வை முன்னெடுத்தால், மக்களை இத்திட்டம் எளிதாக சென்றடையும் எனக் கருத்து தெரிவித்தனர். எனவே, தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளர் மற்றும் நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா ஆகியோரை இவ்வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்க நீதிபதிகள் ஆணையிட்டனர். அதன்படி அவர்கள் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விஜய், அஜித், சூர்யா தரப்பில் இன்று ஆஜரான வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பில் தமிழகத்தில் பல்வேறு சேவைகளை செய்து வருவதாக விளக்கம் அளித்தனர். தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளர் தரப்பில் போலியோ தடுப்பு விழிப்புணர்வுக்கு ஒத்துழைப்பு தர நடிகர்கள் தயார் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ள நடிகர்கள் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கத்தின் விளக்கத்தை ஏற்று வழக்கை மார்ச் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயநீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.