
புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக உதவிக்கரம் பெற்ற மருத்துவ மாணவி கனிமொழி இறுதித்தேர்வில் வெற்றிபெற்று சாதித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையைச் சேர்ந்த மாணவி கனிமொழி கிடைத்த மருத்துவ படிப்பை வறுமையையும் மீறி வைராக்கியமாக பயின்றுவந்தார். இறுதியாண்டின் தொடக்கத்தில் இடி போல் வந்து விழுந்தது, கல்லூரிக்கு கட்டவேண்டிய 5 லட்ச ரூபாய் கல்விக்கட்டணம். சுற்றிலும் கடன், சுற்றத்தாரின் உதவியும் இல்லை என்ற கையறு நிலையில் இருந்த மாணவி கனிமொழி செய்வதறியாது கூலி வேலைக்குச் செல்லத்தொடங்கினார். மருத்துவம் பார்க்க வேண்டிய கைகள் களை பறிக்க தொடங்கியது. கல்நெஞ்சம் கொண்டவர்களின் மனதையும் கலங்க செய்தது மாணவி கனிமொழியின் கஷ்டநிலை.
இதுதொடர்பான செய்தி தொகுப்பு புதியதலைமுறை தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 9ந்தேதி ஒளிபரப்பானது. இதன் எதிரொலியாக மாணவி கனிமொழிக்கு உதவுவதற்கு பலர் முன்வந்தனர். நடிகர் கமல்ஹாசன் கனிமொழியை நேரில் சந்தித்ததுடன், கல்விக்கட்டணம் அனைத்தையும் தாமே கட்டிவிடுவதாகவும் உறுதிதந்தார். அதன்படி, கல்விக்கட்டணம் கட்டியபிறகு கல்லூரிக்குச்சென்ற கனிமொழி உதவிக்கரங்களை உறுதியாக பற்றிக்கொண்டு படிப்பில் முழுக்கவனத்தையும் செலுத்த தொடங்கினார். இந்த நிலையில் நடைபெற்ற மருத்துவப்படிப்பின் இறுதித் தேர்வில் அனைத்து பாடங்களிலும் வெற்றி பெற்று சாதித்துள்ளார்.
இதன் மூலம் மாணவி கனிமொழி பெரம்பலூர் மாவட்டத்தில் அருந்ததியர் சமூகத்தின் முதல் மருத்துவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கனிமொழி வெற்றியை பெற்றோரும் சுற்றத்தாரும் இன்று பெரும் உவகையோடு பார்க்கின்றனர். கானல் நீராகிவிடும் என்று தாம் நினைத்த மருத்துவபடிப்பு புதியதலைமுறை செய்தி எதிரொலியால் இன்று சாத்தியமாயிற்று என மகிழ்ச்சி தெரிவிக்கிறார் மருத்துவர் கனிமொழி.
பணிபுரியும் காலங்களில் ஏழைகளுக்கு இலவசமருத்துவம் பார்க்கப்போவதாகவும், தன் போன்று கஷ்டப்படும் மாணவர்களை கண்டறிந்து அவர்களது படிப்பிற்கு உதவப்போவதாகவும் தெரிவித்துள்ளார். மருத்துவர் கனிமொழியின் கனவுகள்மெய்ப்பட வாழ்த்துகிறது புதியதலைமுறை. கஷ்டப்பட்டதற்கு பலன் கிடைத்ததாக அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.