[X] Close

“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன?

Hundred-families-are-rule-in-india-said-madras-high-court

இந்தியா என்பது மன்னர்கள் ஆண்ட நாடு. ஆகவே பண்டைய இந்தியாவில் வாரிசுகள் ஆதிக்கம் என்பது ஆட்சி அமைப்பின் அடித்தளமாக இருந்துள்ளது. ஷாஜகான் மகன் தாராவும் ஒளரங்க சீப்பும் அப்பாவின் பதவி நாற்காலியை பிடிக்க எப்படியெல்லாம் சதி வேலைகள் செய்தார்கள் என்பதை இவர்களின் ஆட்சி அதிகாரத்தில் நேரடியாக பங்கு பெற்றிருந்த பெர்னியர் பக்கம் பக்கமாக எழுதி இருக்கிறார். 

இன்று ஷாஜகான் உயிருடன் இல்லை. ஒளரங்க சீப் உயிருடன் இல்லை. அவருடைய அண்ணன் தாரா உயிருடன் இல்லை. ஆனால் அவர்கள் வாழையடி வாழையாக கடைப்பிடித்து வந்த ஒரு சம்பரதாயம் மட்டும் இன்றும் இந்தியாவில் உயிருடன் உள்ளது. அதுதான் வாரிசு அரசியல். இந்த வாரிசு அரசியலுக்கு சுதந்திர இந்தியாவில் முதல் விதையை விதைத்தது நேரு குடும்பம்தான். 


Advertisement

நேரு மறையும் வரை, இந்திரா இந்தியாவின் பிரதமராக வருவார் என யாருக்கும் தெரியாது. அவர் தனது கணவர் ஃபெரோஸ் காந்தியுடன் மிக அழகான குடும்ப வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். தன் தந்தை மறைந்த பின், அந்தப் பதவியை அவர் ஏற்க முடிவெடுத்த போது ஃபெரோஸ் அதற்கு முட்டுகட்டை போட்டார். தனது மனைவி தன் வார்த்தையை மீற மாட்டார் என்ற கனவில் இருந்த ஃபெரோஸுக்கு இறுதியில் கிடைத்த பதில் என்ன தெரியுமா ? இந்திராவிடமிருந்து நிரந்தரமான பிரிவு. இந்திரா காந்தியே கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரது வாழ்க்கை சரித்திரத்தை எழுதிய புபுல் ஜெயகர் புத்தகத்தை படித்தால் மேலும் பல நிகழ்வுகள் உங்களுக்கு அதிரடியாக கிடைக்கக்கூடும். 

நேரு மறைந்தார், இந்திரா தெரிந்தார். அதேபோல் இந்திரா மறைந்தபோது பலரும் எதிர்பார்த்தபடி ராஜீவ் காந்தி அந்தப் பொறுப்புக்கு உயர்த்தப்பட்டார். இந்திராவை அடுத்து அரசியல் வாரிசாக ராஜீவ் முன்வைக்கப்பட்டபோது மூத்த அரசியல் தலைவர் சந்திர சேகர், முன் வைத்த விமர்சனம் அன்றைக்கு அதிகம் பேசப்பட்டது. ராஜீவை பார்த்து அவர் ‘அரசியலில் ராஜீவ் ஒரு பப்பு’ என்றார். இதே கருத்தைதான் இன்றைக்கு ராகுலை பார்த்து மோடி, முன்மொழிந்து வருகிறார். அப்படி பார்த்தால் வரலாறு இன்று திரும்பி இருக்கிறது.

ராஜீவ் மறைவுக்குப் பிறகு சோனியா, தனது குடும்பத்திற்கு இனிமேல் அரசியலே வேண்டாம் என்றார். ஆகவே கட்சியில் அடுத்த கட்ட தலைவராக சீத்தாராம் கேசரி உட்கார்ந்தார். ஆனால் வயதால் மூத்த கேசரி கட்சியில் வசீகரமான தலைவர் இல்லை எனச் சிலர் போர்கொடி உயர்த்தினர். கேசரி காலத்தில் அடுத்த கட்ட தலைவராக இருந்தவர் மன்மோகன் சிங். ஆனால் அவரைக் கட்சி பதவியில் அமர்த்த அவரது சகாக்களே முன்வரவில்லை. 

மீண்டும் கட்சிக்கு நேரு குடும்பத்தில் ரத்தம் தேவை என்றனர் காங்கிரஸ் தொண்டர்கள். இறுதியில் சோனியா இன்முகத்தை காட்டினார். இந்தியா முழுமைக்கும் சூறாவளிப் பயணத்தை முடுக்கினார். அவர் வருகை உண்மையில் கட்சியை பலப்படுத்தியது. காங்கிரசை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது. சோனியாதான் பிரதமர் என மக்கள் நம்பிக் கொண்டிருந்தபோது ‘இத்தாலி பெண் இந்தியாவை ஆளக் கூடாது’ எனப் புதிய முழுகத்தை பாஜக முன்வைத்தது. இறுதியில் பாஜகவின் அழுத்தத்தின்படி மன்மோகன் பிரதமர் ஆனார். பத்து ஆண்டுகள் காங்கிரஸ் தன் செல்வாக்கை இந்திய அரசியலில் அழுத்தமாக பதிய வைத்தது.  

முன்கூட்டியே சோனியாவின் உடல்நிலையை உணர்ந்த காங்கிரஸ், ராகுலை சில வருடங்களுக்கு முன்பே ‘அரசியல் பழக’வைத்தது. எல்லோரும் எதிர்பார்த்த நேரத்தில் அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கு வந்து அமர்ந்தார். இன்று அண்ணன் காங்கிரஸ் தலைவர். தங்கை பிரியங்கா காங்கிரஸ் பொதுச்செயலாளர். இது காங்கிரஸ் கட்சியில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் விதிமுறை. இதே முறையை தமிழகத்தில் அதிகம் கடைபிடித்த கட்சி, திமுக. பல வருடங்களாகவே இந்தக்கட்சி மீது இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. 

கட்சியில் பல தலைவர்கள் இருந்தும் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, தனது மகனை திட்டமிட்டு வளர்க்கிறார் எனப் பலரும் பேசி வந்தனர். ஆனால் அப்போது எல்லாம் ‘அவருக்கு எந்தச் சலுகையும் வழங்கப்படவில்லை’ என மறுத்தார் கருணாநிதி. கட்சி ரீதியாக முதலில் வட்டம், மாவட்டம், மாநில இளைஞர் அணி, பிறகு துணைப்பொதுச் செயலார், பொருளார், இன்று திமுக தலைவர் என உயர்ந்திருக்கிறார்.

ஆட்சி ரீதியாக பார்த்தால், இவர், சட்டமன்ற உறுப்பினர், மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதல்வர் என உயர்ந்திருக்கிறார். அதாவது படிப்படியாக உயர்ந்திருக்கிறார். இவர் 1996ல் மேயர் பதவியில் உட்கார வைக்கப்பட்டபோது பலத்த விமர்சனம் கிளம்பியது. அன்றைக்கு இதற்குப் பதிலளித்த ஸ்டாலின், ‘திமுக ஒன்று காங்கிரஸ் கட்சி இல்லை. வழிவழியாக கட்சி பொறுப்புக்கு வர’ என்று கூறினார். 

ஸ்டாலின் உடன் அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் அமைச்சர்கள் ஆகிவிட்டனர். ஆனால் தலைவர் மகன் மேயராகதான் ஆகியிருக்கிறார். அவரது அரசியல் அனுபவத்திற்கு இது சிறிய பதவிதான் என உடன்பிறப்புக்கள் பதில் கொடுத்தனர். ஸ்டாலினே ‘தலைவரின் மகனாக இருப்பதால் பெற்றதைவிட இழந்ததே அதிகம்’ என்றார். இவரை போலவே கட்சியில் இணையாக வளர்ந்துவந்தவர் மு.க. அழகிரி. அதாவது ஸ்டாலினின் மூத்த சகோதரர். இவருக்குப் பின் அவரது தங்கை கனிமொழி அரசியல் பிரவேசம் செய்தார். இன்று அதே வழியில் உதயநிதி ஸ்டாலின் அரசியல் களத்தில் வந்து நிற்கிறார். ஆகவே அவரும் இன்று பேசுப்பொருளாகி இருக்கிறார். 

திமுக இப்போது வெளியிட்டுள்ள நாடாளுமன்ற வேட்பாளர்கள் பட்டியலில் பலரும் வாரிசுகள்தான் உள்ளனர் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி வடசென்னையிலும், தங்கபாண்டியன் மகள் தமிழச்சி தங்கபாண்டியன் தென்சென்னையிலும், மத்திய சென்னையை முரசொலி மாறன் மகன் தயாநிதி மாறனும் துரைமுருகன், மகன் கதிர் ஆனந்த் வேலூருக்கும், பொன்முடி மகன் கவுதம் சிகாமணி கள்ளக்குறிச்சிக்கும், கனிமொழி தூத்துக்குடியிலும் போட்டியிடுகின்றனர். 

இதேபோல அதிமுகவும் வாரிசு அரசியலை இந்தத் தேர்தல் மூலம் முன்வைத்துள்ளது. தென் சென்னையில் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தனும், தேனியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரும், திருநெல்வேலியில் பி.ஹெச் பாண்டியன் மகன் மனோஜ் பாண்டியனும், மதுரையில் ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யனும் போட்டியிடுகிறார்கள். 

இந்தப் பட்டியல் பற்றி பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பிறகுதான். ஆனால் இந்த நிலைமையை நீதிமன்றமே விமர்சித்திருக்கிறது என்பதுதான் முக்கிய செய்தி. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன், உயர் நீதிமன்ற கிளையில் தேர்தல்களில் போட்டியிடுவோர் வேட்புமனுக்களுடன் தங்கள் மீதான குற்ற வழக்குகள், கல்வித் தகுதி, அசையும் மற்றும் அசையா சொத்துகள், கடன் இருப்பு ஆகிய விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும் என மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணைக்கு இடையே, ஒரு முக்கிய விமர்சனத்தை முன் வைத்திருக்கிறது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர், "பெரும்பாலான கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன. வாரிசு அரசியலுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் விதிவிலக்காக உள்ளன. சில மாநிலங்களில், பாஜகவிலும் வாரிசு அரசியல் இல்லை. இந்தியாவில் சில 100 குடும்பங்களும், தமிழகத்தில் சில 10 குடும்பங்களும் ஆட்சி அதிகாரத்தை தங்கள் வசம் வைத்திருக்க விரும்புகின்றன. முன்னாள் முதல்வர் அண்ணாவின் மகன் வறுமையால் தற்கொலை செய்து கொண்டார். அண்ணா பெயரை சொல்லி கட்சி நடத்தும் திமுக, அதிமுக கட்சிகள் அவரை கண்டுகொள்ளவில்லை" எனக் கூறியுள்ளனர். 

நீதிபதிகள் கூறிய பட்டியலை மீறி இன்னும் வாரிசுகளை ஊக்குவிக்கும் பல அரசியல் கட்சிகள் உள்ளன. தொடக்கத்திலிருந்து குடும்ப அரசியலை எதிர்த்துவந்த தேமுதிக இன்று, பிரேமலாதாவின் சகோதரர் சுதீஷை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் அக்கட்சியின் மேடைகளில் நம்பிக்கை நட்சத்திரமாக முன்வைக்கப்பட்டு வருகிறார். அதாவது, விஜயகாந்த் கட்சிக்கு தலைவர், மனைவி பிரேமலதா பொருளாளர். அவரது மைத்துனர் சுதீஷ் கட்சிக்கு இளைஞர் அணி செயலாளர்.

இதேநிலை பாமகவிலும் உண்டு. பு.த. இளங்கோளவன், பு.த.அருள்மொழி, பொன்னுசாமி, ஜி.கே.மணி எனப் பல கட்ட தலைவர்கள் கட்சியில் இருந்தும் ராமதாஸ் மகன் அன்புமணி கடந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராக முன்மொழியப்பட்டார். தமிழ்நாட்டில் நரசிம ராவ் எதிர்பால் திடீர் என்று மலர்ந்த மூப்பனாரின் தமாகா அவரது காலத்திலேயே கலைக்கப்பட்டது. அதன்பிறகு அவரது மகன் ஜி.கே.வாசன், காங்கிரஸ் ஆட்சியில் கப்பல்துறை அமைச்சராக பதவி வகித்தார். பிறகு கருத்து வேறுபாடுகள் எழ, மீண்டும் உதயமானது தமாகா. இன்று அக்கட்சிக்கு மூப்பனாரின் வாரிசு ஜி.கே. வாசன்தான் தலைவர். தமிழக காங்கிரசை எடுத்து கொண்டால் ப.சிதம்பரத்திற்குப் பிறகு கார்த்திக் சிதம்பரம் வந்துள்ளார். அன்று தமிழ காங்கிரஸ் தலைவராக இருந்தவர் குமரி ஆனந்தன். இன்று அவரது மகள் தமிழிசையோ தமிழக பாஜகவின் தலைவர். 

தமிழ்நாட்டில் நிலவும் அதே நிலைதான் இந்தியா முழுவதிலும் நீடிக்கிறது. உத்திரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவிற்குப் பின் அகிலேஷ் யாதவ் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளார். இப்போது அவரது மனைவி ட்ம்பிள் வந்துவிட்டார். ஏறக்குறைய இவர்களின் குடும்பமே ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. இதேபோல பீகாரில் லாலு பிரசாத் யாதவ். அவர் ஊழல் புகாரில் சிக்கி சிறைக்குப் போக அவரது மனைவி ராப்ரி தேவி ஆட்சிக்கு வந்து உட்கார்ந்தார். அவரது மகன்களும் அரசியலில் இருக்கிறார்கள். அதில் தேஜஸ்வி துணை முதல்வராகவே பதவி வகித்துவிட்டார். அடுத்து காஷ்மீர் மாநிலம். அந்த மாநிலத்தில் தேசிய மாநாட்டு கட்சியில் தலைவர் ஷேக் அப்துல்லாவிற்குப் பிறகு ஃபரூக் அப்துல்லா வந்தார். இவருக்குப் பின் அவரது மகன் உமர் அப்துல்லா கட்சியை வழிநடத்துகிறார். 

ராஜஸ்தானை எடுத்துக் கொண்டால் சிந்தியா குடும்பமே ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. மாதவராவ் சிந்தியா அடுத்து வசுந்தரா ராஜே, ஜோதிர் ஆதித்ய சிந்தியா என குடும்பமே அதிகாரம் செலுத்தி வருகிறது. இவர்கள் ஒரு ராஜ குடும்பத்தினர் என்பது கூடுதல் தகவல். இந்தக் குடும்பத்தை போல ஓம்பிரகாஷ் சவுதாலா. ஹரியான மாநிலமே இவரது குடும்ப கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

அதே போல மகாராஷ்டிரா. பால் தக்ரே மறைந்த பிறகு உதவ் தாக்ரே வந்தார். அவருக்குப் பிறகு அவரது மகனும் அரசியல் களம் கண்டுவிட்டார். ஒடிசாவில் பிஜூ பட்நாயக், அவருக்குப் பிறகு நவீன் பட்நாயக் இருக்கிறார். ஆந்திராவை எடுத்தால் என்.டி.ஆருக்குப் பிறகு அவரது மனைவி, அடுத்து மருமகன் சந்திரபாபு நாயுடு, அவருக்குப் பிறகு அவரது மகன் நரா லோகேஷ் களம் கண்டுவிட்டார். தெலுங்கானாவின் சந்திரசேகரராவ் குடும்பமே மாநிலத்தை ஆட்டிப் படைத்து வருகிறது. 

கர்நாடகாவை எடுத்து கொண்டாலும் இதேநிலை நீடிக்கிறது. தேவே கவுடா மகன் குமாரசாமி ஆட்சிக்கு வந்திருக்கிறார். எடியூரப்பாவும் அதே பாணியை கடைபிடித்து மகனை அவர் அரசியலுக்குக் கொண்டு வந்துவிடார். வாரிசு அரசியலை அதிகம் ஊக்குவிக்காத பாஜக என நீதிமன்றம் கூறியிருந்தாலும் அக்கட்சியிலும் வாரிசு அரசியல் அதிகம் உண்டு. எடியூரப்பா தன் மகனை கொண்டு வந்தார். மேனகா காந்தி மகன் வருண் காந்தி, வேத் கோயல் மகன் பியூஷ் கோயல், ராமன் சிங் மகன் அபிஷேக் சிங், பிரமோத் மகாஜனுக்கு அடுத்து அவரது மகள், பி.கே. துமல் மகன் அனுராக் தாகூர் எனப் பட்டியல் நீளுகிறது. இதில் கம்யூனிஸ்ட் மட்டும் விதிவிலக்கு. ஆனால் அதிலும் காரத், அவரது மனைவி பிருந்தா காரத் நினைவுக்கு வரலாம். 

ஆக, இந்திய அரசியல் அதிகாரம் என்பது ஏறக்குறைய 100 குடும்பங்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இனி வருங்காலத்தில் வர போகின்ற கட்சிகள் இதற்கு விதிவிலக்காக இருக்கும் என்று கூற முடியாது. கமல்ஹாசன் ‘எனது வாரிசுகள் வரமாட்டார்கள்’ என வாக்குறுதி தந்துள்ளார். அது எந்தளவுக்கு கடைபிடிக்கப்படும் என்பதை எதிர்காலம்தான் தீர்மானிக்கும். ஏனெனில் ஒரு காலத்தில் என் குடும்பத்தினர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் என வாக்குறுதி கொடுத்து ஆரம்பமான கட்சிகளில் , இன்று வாரிசுகள் அரசியலுக்கு வந்துள்ளதோடு , முக்கிய பொறுப்புகளையும் எடுத்துக் கொண்டார்கள்.   

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close