
புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க 4ஆவது முறையாக சீனா முட்டுக்கடை போட்டுள்ளது.
காஷ்மீரின் புல்வாமாவில் பிப்ரவரி 14-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தத் தாக்குலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்தன.
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் இந்தியா வலியுறுத்தி வருகிறது. மேலும் மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கக்கோரி அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கடந்த மாதம் 27ஆம் தேதி தீர்மானத்தை முன்மொழிந்தன.
இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. பல நாடுகள் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கத் தயாராக இருந்தபோதிலும், சீனா மீண்டும் மறுப்பு தெரிவித்தது. இந்த விவகாரத்தில், தனது வீட்டோ அதிகாரம் மூலம் இந்தியாவின் நடவடிக்கைக்கு 4ஆவது முறையாக சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது.