[X] Close

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை மறுபடி மறுபடி சொன்னது ஏன் ? கனிமொழி சரமாரி கேள்வி

Kanimozhi-speech-at-Pollachi-Protest

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொள்ளாச்சியில் நேற்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தடையை மீறி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநில மகளிரணி தலைவி கனிமொழி எம்.பி பங்கேற்று பேசியதாவது:-


Advertisement

“பொள்ளாச்சி பாலியல் கொடூரம் 7 ஆண்டுகளாக நடந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் காவல்துறை வெறும் 4 பேரை கைது செய்துள்ளது. ஏறத்தாழ 250-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். யாரை பாதுகாக்க காவல்துறை இப்படி செய்கிறார்கள் என தெரியவில்லை. பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்ததற்காக பாராட்டுகிறேன். ஆனால் புகார் கொடுத்த சிறிய நேரத்தில், அவரது அண்ணன் தாக்கப்படுகிறார். அப்படியானல் புகார் எப்படி வெளியே போகிறது..?


Advertisement

எஸ்.பி இதுகுறித்து செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், மறுபடியும் மறுபடியும் அங்கே சொல்லப்படுகிறது. சட்டம் என்ன சொல்கிறது..? குழந்தைகளோ, பெண்களோ பாதிக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறது. இது சட்டம். ஆனால் இங்கு, வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெளியே வருகிறது. எல்லோரும் இவ்விவகாரத்தில் கேள்வி எழுப்பிய பின் தான் வழக்கே பதியப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை காவல்துறை வெளியிடுவதே பல சந்தேகங்களை எழுப்பக் கூடும் வகையில் உள்ளது. ஏனென்றால், ஒரு பெண்ணின் பெயரை வெளியிடும்போது, பாதிக்கப்பட்ட மற்ற 250 பெண்கள் மவுனமாக இருக்க வேண்டும் என்று மறைமுக அச்சுறுத்தல் கொடுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் யாரும் பிரச்னையை வெளியே சொல்லிவிடக் கூடாது என்பதற்காகத் தான், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெளியிடப்படுகிறோ என்ற சந்தேகம் நிலவுகிறது.


Advertisement

செய்தியாளர்கள் சந்திப்பில் ஆளும் கட்சிக்கு தொடர்பில்லை என யாரும் கேட்காமலேயே எஸ்.பி கூறுகிறார். போராட்டம், கண்டனங்கள் என எழுந்த பிறகுதான் முதல் நடவடிக்கையே எடுக்கப்படுகிறது. எல்லோரும் நாங்கள் இந்த விஷயத்தை அரசியல் ஆக்குவதாக சொல்கிறார்கள். ஆனால் அரசியல் ஆக்கினால்தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்..? இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னர் வரை, இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிமுக பிரமுகர்களை கைதும் செய்யவில்லை. பதவியையும் பறிக்கவில்லை..? தள்ளிப்போட்டு கொண்டே வந்தால் இவ்விவகாரத்தை மக்கள் மறந்துவிடுவார்கள் என்று எண்ணினார்கள்.

கைது செய்யப்படும்போது காவல்துறை என்ன சொன்னார்கள்..? செல்போனில் 50 வீடியோக்கள் படங்கள் இருக்கிறது என சொன்னார்கள். ஆனால் இப்போது என்ன சொல்கிறார்கள். வெறும் 4 வீடியோக்கள் இருக்கிறது என்கிறார்கள். ஆனால் நம்பகத்தகுந்த இடங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வருவதாக தகவல் வருகிறது. மாறி மாறி பேசுகிறார்கள் காவல்துறையினர்.

அரசியல் பின்னணி இருக்கிறது என கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு வீடியோவில் கூறி உள்ளார். இந்த சுற்று வட்டாரத்தில் ஒரு பெண் தற்கொலையோ, கொலையோ செய்யப்பட்டு இருந்தால் அது தொடர்பாக மறுவிசாரணை செய்ய வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் அதிமுக பிரமுகர் குடும்பத்தை சேர்ந்த ஒருவர், கார் விபத்தை ஏற்படுத்திய வழக்கில் சிக்குகிறார். ஆனால் அந்த வழக்கை மூடி மறைக்கின்றனர். கைது செய்யப்பட்ட அடுத்த நிமிடமே அந்த நபர் விடுவிக்கப்படுகிறார். ஆனால் இன்று நமக்கு சந்தேகம் வருகிறது. உண்மையில் அது விபத்தா..? அல்லது பெண் அந்த காரில் இருந்து தூக்கி வீசப்பட்டாரா..?  இல்ல பெண் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் நமக்கு இப்போது வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை அடித்தவருக்கு எஸ்.பி யாக பதவு உயர்வு அளித்தது இந்த ஆட்சி. மக்களையும், ஊடகத்தினரையும் மிரட்டுகின்றனர். கேள்வி கேட்டால் அடிக்கின்றனர். மிரட்டுகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க பயப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

இதனிடையே ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கனிமொழியை கைது செய்து போலீசார் வண்டியில் ஏற்றினர். இதைக் கண்டித்து தொண்டர்கள் கோஷம் எழுப்பியவாறு மறித்தனர். இதனால் தொண்டர்கள்- போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையே வாகனத்தை விட்டு கீழே இறங்கி வந்த கனிமொழி, தரையில் உட்கார்ந்து திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.


Advertisement

Advertisement
[X] Close