
திருவாரூர் அருகே உரிய ஆவணங்களின்றி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 50 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ளவற்றில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்துப் பகுதிகளிலும் நேற்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும், மாவட்ட எல்லைப் பகுதிகளிலும் சுமார் 24 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கானூர் பகுதியில் சோதனைச் சாவடி அமைத்து காவல்துறையினர் வாகனங்களை சோதனை நடத்தி வருகின்றனர்.
அப்போது கார் ஒன்றில் சோதனையிட்டதில், பையில் 50 லட்சம் ரூபாய் இருந்ததைக் கண்டனர். அதனைப் பறிமுதல் செய்து காரில் வந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது நாகையை சேர்ந்த சாகுல் ஹமீது உள்ளிட்டோர் தங்களது பேருந்துக்கு பாடி கட்டுவதற்காக பணத்தை திருச்சிக்கு கொண்டுச் செல்வதாக கூறினர். ஆனால், பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.