4-வது ஒரு நாள் போட்டி: இந்திய அணியில் 4 மாற்றம்!

4-வது ஒரு நாள் போட்டி: இந்திய அணியில் 4 மாற்றம்!
4-வது ஒரு நாள் போட்டி: இந்திய அணியில் 4 மாற்றம்!

இந்தியா- ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட, டி20 தொடரை ஆஸ்தி ரேலிய அணி கைப்பற்றியது. அடுத்து, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. ஐதராபாத்தில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாக்பூரில் நடந்த 2-வது ஒரு நாள் போட்டியில், கடைசி ஓவரில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. ராஞ்சியில் நடந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. 

இந்நிலையில் நான்காவது ஒரு நாள் போட்டி, மொகாலியில் இன்று நடக்கிறது. மூத்த வீரர் தோனிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதில் ரிஷாப் பன்ட் களமிறங்கியுள்ளார். அணியில் மாற்றங்கள் இருக்கும் என்று கேப்டன் கோலி தெரிவித்திருந்தார். அதன்படி அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதனால் கடந்த 3 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத ராயுடுவுக்குப் பதிலாக கே.எல்.ராகுல் இணைந்துள்ளார். முகமது ஷமிக்குப் பதிலாக புவனேஷ்வர்குமார் சேர்க்கப்பட்டுள்ளார். ஜடேஜாவுக்குப் பதிலாக சாஹல் இணைந்துள்ளார்.  

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடலாம் என்பதால், இந்திய வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள். அதே நேரம் தொடரை இழக்காமல் இருக்க ஆஸ்திரேலிய அணி கடும் சவால் கொடுக்கும். ஆஸ்திரேலிய அணி, முந்தைய ஆட்டத்தில் கிடைத்த வெற்றி காரணமாக, உற்சாகத்துடன் களமிறங்கும். அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் ஃபார்முக்கு திரும்பியிருப்பது பலம். பந்துவீச்சில் கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், ஜம்பா அசத்தி வருகிறார்கள். 

இன்றைய போட்டி நடக்கும் மொகாலி மைதானம் பேட்டிங்குக்கு சாதகமான மைதானம் என்பதால், ரன்மழை பொழியும் என்று எதிர்பார்க்கலாம். 

இந்தியா: 
ரோகித் சர்மா, ஷிகர் தவான், ராகுல், விராத் கோலி (கேப்டன்), ரிஷாப் பான்ட், கேதர் ஜாதவ், விஜய் சங்கர், குல்தீப் யாதவ், சாஹல், புவனேஷ்வர்குமார், பும்ரா.

ஆஸ்திரேலியா:
ஆரோன் பின்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், ஹேண்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், ஆஸ்டன் டர்னர், அலெக்ஸ் கேரி, கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, ஜேசன் பேரண்டோர்ப்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com