Published : 10,Mar 2019 02:06 AM

இன்று, 4-வது ஒரு நாள் போட்டி: களமிறங்குகிறார் கே.எல்.ராகுல்!

India-vs-Australia-4th-ODI--K-L-Rahul-may-included

இந்தியா- ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று நடக்கிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட, டி20 தொடரை ஆஸ்தி ரேலிய அணி கைப்பற்றியது. அடுத்து, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. ஐதராபாத்தில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாக்பூரில் நடந்த 2-வது ஒரு நாள் போட்டியில், கடைசி ஓவரில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. 

3 வது போட்டி, ராஞ்சியில் நேற்று முன் தினம் நடந்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 313 ரன் எடுத்தது. உஸ்மான் கவாஜா சதம் அடித்தார். பின்னர் சேஸிங்கை தொடங்கிய இந்திய அணி, 281 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. விராத் கோலி சதம் அடித்தார்.

இந்நிலையில் நான்காவது ஒரு நாள் போட்டி, மொகாலியில் இன்று நடக்கிறது. கடைசி இரண்டு போட்டிகளில் தோனிக்கு ஓய்வளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதால், இன்றைய போட்டியில் அவருக்கு பதில் ரிஷாப் பன்ட் களமிறங்குவார். அணியில் மாற்றங்கள் இருக்கும் என்று கேப்டன் கோலி தெரிவித்திருக்கிறார்.

இதனால் கடந்த 3 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத தவானுக்குப் பதிலாக கே.எல்.ராகுல் இணைவார் என்று தெரிகிறது. முகமது ஷமி காயம் குணமாகவில்லை என்றால் புவனேஷ்வர்குமார் சேர்க்கப்படுவார். 

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடலாம் என்பதால், இந்திய வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள். அதே நேரம் தொடரை இழக்காமல் இருக்க ஆஸ்திரேலிய அணி கடும் சவால் கொடுக்கும்.

ஆஸ்திரேலிய அணி, முந்தைய ஆட்டத்தில் கிடைத்த வெற்றி காரணமாக, உற்சாகத்துடன் களமிறங்கும். அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் ஃபார்முக்கு திரும்பியிருப்பது பலம். பந்துவீச்சில் கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், ஜம்பா அசத்தி வருகிறார்கள். 

இன்றைய போட்டி நடக்கும் மொகாலி மைதானம் பேட்டிங்குக்கு சாதகமான மைதானம் என்பதால், ரன்மழை பொழியும் என்று எதிர்பார்க்கலாம். போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்