Published : 09,Mar 2019 05:19 PM
‘தேர்தல் பரப்புரை விளம்பரங்களில் ராணுவ வீரர்களின் படம் கூடாது’ - தேர்தல் ஆணையம்

அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை விளம்பரங்களில் ராணுவ வீரர்களின் படங்களை பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் பதவிக்காலம் வரும் ஜூன் 3ஆம் தேதி முடிவடையவுள்ளது. இதனால் அதற்கு முன்பு தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். இதற்காக தேர்தல் ஆணையம் பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்களை நடத்திவந்தது. அத்துடன் தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனையையும் நடத்தி வந்தது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் தகவல் தெரிய வந்துள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான கடைசி கட்ட ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் இம்முறை தேர்தலை 7 அல்லது 8 கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்கள், பொதுச்செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், ராணுவ உயரதிகாரிகள், ராணுவ விழாக்கள் குறித்த படங்களை எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது என நிர்வாகிகள், வேட்பாளர்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.