Published : 09,Mar 2019 10:01 AM
“கே.சி.பழனிசாமியை கட்சியில் சேர்த்ததாக நாங்கள் சொன்னோமா?”- முதல்வர் கேள்வி

கே.சி.பழனிசாமியை மீண்டும் அதிமுகவில் சேர்க்கவில்லை என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
கே.சிபழனிசாமியை மீண்டும் அதிமுகவில் சேர்த்ததாக நாங்கள் கூறினோமா? என்று சேலம் அருகே ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “கே.சி.பழனிசாமி அதிமுகவில் இணைந்துள்ளார் என்று எங்கள் தரப்பில் கூறவில்லை. சில கோரிக்கைகள் தொடர்பாகத்தான் தலைமைச் செயலகத்தில் என்னை அவர் சந்தித்தார். அதிமுகவில் யாரை சேர்த்தாலும் கட்சி தலைமை அலுவலகத்தில்தான் அது நடக்கும்” என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததாக கே.சி.பழனிசாமி கூறியிருந்த நிலையில், முதல்வர் இந்த விளக்கத்தினை அளித்துள்ளார்.
முன்னதாக, காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய பாஜகவை, விமர்சித்ததற்காக கே.சி.பழனிசாமி கடந்த ஆண்டு அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குறித்து கடுமையாக விமர்சித்து வந்த கே.சி.பழனிசாமி, அதிமுக கட்சிப் பதவி விவகாரம் குறித்து டெல்லி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை நேற்று கே.சி.பழனிசாமி சந்தித்தார். சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ தேர்தல் காலத்தில் மனவேறுபாடுகளை ஒதுக்கிவைத்து விட்டு ஒன்றாக பணியாற்ற வேண்டும். அதிமுக வெற்றிக்காக பணியாற்ற வேண்டியது அனைவரின் கடமை. காவேரி பிரச்னையில் கருத்து சொன்னதற்காகவே நீக்கப்பட்டேன். அதிமுகவுக்குத்தான் வாக்கு சேகரிக்க வேண்டும் என்று இணைந்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து, தலைமைச் செயலகத்தில் இந்த இணைப்பு நடைபெற்றது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. தலைமைச் செயலகத்தை கட்சிப் பணிக்கு பயன்படுத்திய முதல்வர் பழனிசாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக ஆளுநருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில்தான்,செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், கே.சி.பழனிசாமியை மீண்டும் அதிமுகவில் சேர்க்கவில்லை என்று மறுத்துள்ளார்.