Published : 09,Mar 2019 03:12 AM
பாக்., நாடாளுமன்ற மேல் சபையில் முதன் முறையாக உரையாற்றிய இந்து பெண்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் நாடாளுமன்ற மேல் சபையில் முதன் முறையாக ஒரு இந்து பெண் ஒருவர் உரையாற்றினார்
பாகிஸ்தானில், நாடாளுமன்ற மேல்சபையில் சிந்து மாகாணத்தில் உள்ள தொகுதிக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்கு சென்றார் கிருஷ்ண குமாரி கோல்ஹி. நேற்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து அவர் நாடாளுமன்ற மேலவையின் ஒரு நாள் தலைவராக நியமிக்கப்பட்டு கவுரவம் செய்யப்பட்டார். இந்து மதத்தைச் சேர்ந்த இவர் முதன்முறையாக பாகிஸ்தான் நாடாளுமன்ற மேல் சபையில் உரையாற்றினார். இதன் மூலம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்து பெண் என்ற பெருமையை பெற்றார் கிருஷ்ண குமாரி.
40 வயதான கிருஷ்ண குமாரி கோல்ஹி தொழிலாளர்களின் உரிமைக்காக பல ஆண்டுகள் போராடியவர். இது குறித்து கருத்து தெரிவித்த கிருஷ்ண குமாரி, நாடாளுமன்ற மேலவை தலைவரின் இருக்கையில் நான் அமர்ந்தது பெருமையையும், மகிழ்ச்சியையும் தருகிறது என்று தெரிவித்துள்ளார்
இந்த விவகாரம் குறித்து பேசிய மேலவை எம்பி பைசல், மகளிர் தினத்தன்று பெண்களை போற்றும் விதமாகவும், கவுரவம் செய்யும் விதமாகவும் அவைத்தலைவரின் இருக்கையில் ஒருநாள் அமர அனுமதி வழங்கப்பட்டது என்று தெரிவித்தார்.
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பாகிஸ்தானில் முதல்முறையாக ஒரு இந்து பெண், நாடாளுமன்ற மேல் சபையில் உரையாற்றியது பெருமையாக பார்க்கப்பட்டு வருகிறது. இது பெண்கள் மற்றும் சிறுபான்மையினர்களின் உரிமையை நிலைநாட்டும் செயலாகவும் பார்க்கப்படுகிறது.