Published : 07,Mar 2019 04:00 AM
''கடைசி ஓவர் வீசுவதை விட ஹிந்தி பேசுவதுதான் பிரஷர்'' - கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர்

கடைசி ஓவர் வீசுவதை விடவும் ஹிந்தி பேசுவதுதான் தனக்கு பிரஷர் என தமிழக கிரிக்கெட் வீரரான விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்
நாக்பூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. விராட் கோலி சதம் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இந்திய அணி தனது 500வது வெற்றியை பதிவு செய்தது.
இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம், விஜய்சங்கர் அற்புதமாக வீசிய கடைசி ஓவர் ஆகும். கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் மற்றும் மூன்றாவது பந்தில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி விஜய்சங்கர் அசத்தினார். பும்ரா, சமிக்கு ஓவர்கள் முடிவடைந்து விட்ட நிலையில், இக்கட்டான நிலையில் கடைசி ஓவரை விஜய்சங்கர் வீசி நிலைமை தன்வசமாக்கினார்.
இந்த நிலையில் போட்டிக்கு பிறகு விஜய் சங்கரிடம் சக இந்திய வீரர் சாஹல் பேட்டி எடுத்தார். அதில் ''உங்களுக்கு கடைசி ஓவர் வீசுவது பிரஷரா.. ஹிந்தி பேசுவது பிரஷரா..'' என்று கேட்டார். அதற்கு பதிலளித்த விஜய் சங்கர் ''ஹிந்தியில் பேசுவதுதான் கொஞ்சம் பிரஷர்'' என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.
தற்போது சென்னையில் வசித்து வரும் ஆல் ரவுண்டரான விஜய்சங்கர், தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Men Of The Moment - Captain @imVkohli & ice cool @vijayshankar260 relive #TeamIndia's 500th ODI win in our latest episode of Chahal