Published : 06,Mar 2019 03:23 PM
பாஜக எம்.பி.யை காலணியால் அடித்த பாஜக எம்.எல்.ஏ.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்.பி.யை, பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் காலணியால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரப்பிரதேச மாநிலம் சந்த்கபிர் நகரில், பாஜக அரசின் திட்டப்பணி ஒன்றுக்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த விழாவில் பாஜக நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பெயர் பட்டியல் இடம்பெற்றிருந்தது. ஆனால் இதில், அப்பகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. ராகேஷ் சிங்கின் பெயர் விடுபட்டு போனதாக தெரிகிறது.
தனது விடுபடல் தொடர்பாக ராகேஷ் சிங் கேட்க, அப்போது பாஜக எம்.பி. ஷரத் திரிபாதியுடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராகேஷ் சிங், ஒரு கட்டத்தில் தனது காலணியை கழற்றி, எம்.பி. ஷரத் திரிபாதியை சரமாரியாக தாக்கினார். இதனையடுத்து ஷரத் திரிபாதியும் திருப்பித் தாக்கினார். எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உயரதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இருவரையும் அங்கிருந்த பாஜக நிர்வாகிகள் தடுத்தனர்.