
தமிழகத்தின் அரசியல் சூழல் மாறியதால்தான் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது என அன்புமணி ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுகவிடம் முன் வைத்த கோரிக்கைகளில் ஊழல் குறித்து எதுவும் குறிப்பிடாதது ஏன், குட்கா முறைகேடு புகாரில் சிக்கிய அதிமுகவுடன் கூட்டணி வைத்தது ஏன், தேர்தல் நேரத்தில் அரசியல் நிலைப்பாட்டை மாற்றுவது மக்களை முட்டாளாக்கும் செயல் இல்லையா, முதல்வரை சரமாரியாக விமர்சித்துவிட்டு அவருடன் உணவருந்த உங்களுக்கு நெருடவில்லையா, ‘மாற்றம்,முன்னேற்றம், அன்புமணி’ என்ற லட்சியம் என்ன ஆனது என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் முன்வைத்தனர்.
இதற்கு பதிலளித்து பேசிய அன்புமணி “அப்போது இருந்த சூழல் வேறு. தற்போது உள்ள சூழல் வேறு. அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் எனக் கூறியது உண்மைதான். ஆனால் தற்போது சூழல் மாறிவிட்டது. பாஜகவை கடந்த ஓராண்டாக விமர்சித்த சிவசேனா அக்கட்சியுடன் தற்போது கூட்டணி வைத்துள்ளது. உத்திரப்பிரதேசத்தில் எதிரெதிராய் இருந்த மாயாவதியும் அகிலேஷ் யாதவும் கூட்டணி அமைத்துள்ளனர்.
அடுத்த தேர்தலுக்கு என்ன நிலைப்பாடு என்பது பற்றி தற்போது முடிவெடுக்க முடியாது. ஒரு கட்சியை விமர்சித்தால் அதனுடன் கூட்டணி அமைக்ககூடாது என எதுவும் இல்லை. விமர்சனங்களை வைத்து பார்த்தால் இந்தியாவில் எந்தக் கட்சியும் கூட்டணி வைக்க முடியாது.
ஆளுநரிடம் தமிழக அரசு மீது தந்த புகாரை திரும்ப பெறவில்லை. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. கூட்டணி சேர்வதால் பாமக கொள்கைகளிலிருந்து எள்ளளவும் பின்வாங்காது. தமிழக அரசு மீதான குட்கா புகாரில் உண்மையிருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தினுள் இருந்து பாமக தமிழகத்தின் உரிமைக்காக போராடும். திராவிடக்கட்சிகளோடு கூட்டணி வைக்கமாட்டோம் என்று கூறினோம். பாமக தனித்து நின்றபோது மக்கள் கண்டுகொள்ளவில்லை. எங்களது முடிவை மக்கள் அங்கீகரிக்கவில்லை. அதனால் நிலைப்பாட்டை மாற்றிவிட்டோம். அதிமுக - பாமக - பாஜக கூட்டணியை மக்கள் விரும்புகிறார்கள். மற்றவர்கள் பற்றி கவலையில்லை. அதிமுக அரசின் 8 வழிச்சாலைகள் திட்டத்திற்கு எதிராக போராடுவோம்.” எனத் தெரிவித்தார்.
இதனிடையே அரசியல் நிலைப்பாடு மாற்றம் குறித்து கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். குட்கா புகார் குறித்த கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார். ஜெயலலிதா மணிமண்டபம் குறித்த கேள்விக்கும் அன்புமணி பதிலளிக்க மறுப்பு தெரிவித்து விட்டார்.