Published : 19,Feb 2019 08:15 AM
அதிமுக - பாமக ஏற்கெனவே மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணி: ஸ்டாலின்

அதிமுக- பாமக கூட்டணி ஏற்கெனவே கடந்த 2009-ல் மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணி என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக- பாமக இடையேயான கூட்டணி உறுதியாகி உள்ளது. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுது. அதேநேரம் தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாமக முழு ஆதரவு கொடுக்கும் என இரண்டு கட்சிகளுடனான கூட்டணி ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக- பாமக கூட்டணி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதாவது ஏற்கெனவே கடந்த 2009-ல் அதிமுக- பாமக கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணி என அவர் கூறியுள்ளார்.
‘அதிமுகவின் கதை’ என்ற பெயரில் தமிழக அரசை விமர்சித்து புத்தகம் வெளியிட்ட ராமதாஸ், தற்போது அதே கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார் என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழக மக்களை பற்றி கவலைப்படாமல் பணத்திற்காக அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூர் அருகே ஆம்பூரில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் இதனை தெரிவித்தார்.