Published : 18,Feb 2019 05:14 AM

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை...!

SC-Banned-to-Open-Sterlite-Plant

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே மாதம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். தமிழகம் முழுவதும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இதனையடுத்து சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தியதாகக் கூறி, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், பல்வேறு நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு அனுமதி அளித்தது.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனமும், பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடைக் கோரி தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தன. இந்த வழக்கில் அனைத்து தரப்பினரின் வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்துள்ளது.

அதாவது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய உச்சநீதிமன்றம், ஆலையை திறக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையையும் நிராகரித்துள்ளது. அத்துடன் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு வேதாந்தா நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்