Published : 16,Feb 2019 02:50 AM

தூத்துக்குடியில் தலை துண்டிக்கப்பட்டு திருநங்கை கொலை..!

Transgender-Murdered-in-Tuticorin

தூத்துக்குடியில் முன் விரோதம் காரணமாக திருநங்கை ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை ராஜாத்தி. இவர் லூர்தம்மாள்புரம் பகுதியிலுள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூசாரியாக உள்ளார். நேற்று மாலை 5.30 மணியளவில் வழக்கம்போல் ராஜாத்தி கோயிலுக்கு பூஜை வேலைகளை செய்துள்ளார். அப்போது கோயிலுக்குள் திடீரென புகுந்த மருது என்பவர், கையில் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக ராஜாத்தியை வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் ராஜாத்தி கீழே சாய்ந்துள்ளார். பின்னர் ராஜாத்தியின் தலையை தனியாக துண்டித்த மருது அதனை கோயிலுக்கு அருகில் வீசிவிட்டு தப்பியோடி விட்டார். இச்சம்பவம் குறித்து அறிந்த வடபாக்கம் போலீசார் அங்கு சென்று  இறந்தவரது உடலையும் , தலையையும் மீ்ட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே முன்விரோதம் காரணமாக திருநங்கை ராஜாத்தி கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மாரியம்மன் கோயிலில் இதற்கு முன்பு மருதுதான் பூசாரியாக இருந்துள்ளார். ராஜாத்தி கோயிலில் பூசாரியாக ஆன பின்பு, இவருக்கும் மருதுவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கோயிலில் திருவிழா நடத்துவது, கோயிலுக்காக நிதி வசூல் செய்வது உள்பட பல விஷயங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இந்நிலையில் முன்விரோதம் காரணமான திருநங்கை ராஜாத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்