புதுச்சேரி முதல்வர் தர்ணா ! ஆளுநர் கிரண்பேடி டெல்லி பயணம்
புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி இரண்டாவது நாளாக தர்ணா போராட்டம் நடத்தி வரும் நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
புதுச்சேரியில் அரசு நிர்வாகத்திற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போடுவதாகக் கூறி ஆளுநர் மாளிகை அருகே முதலமைச்சர் நாராயணசாமி கறுப்பு சட்டை அணிந்து இரண்டாவது நாளாக இன்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் அமைச்சர்களும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதாவது இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என 39 கோரிக்கைகளை முதலமைச்சர் நாராயணசாமி முன்வைத்துள்ளார். இந்த கோரிக்கைகள் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கிரண்பேடிக்கு, நாராயணசாமி கடிதம் எழுதியிருந்த நிலையில் அவை இன்னும் நிறைவேற்றப்படாத காரணத்தினால் போராட்டத்தை தொடர்வதாக கூறியுள்ளார். தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தர்ணா போராட்டம் தொடரும் என்றும் திட்டவட்டமாக நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதனிடையே பிப்ரவரி 21-ஆம் தேதி ஆலோசனைக்கு வருமாறு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கோரிக்கைகள் தொடர்பாக எழுதப்பட்ட கடிதத்தின் பதிலுக்கு காத்திருக்காமல், முதலமைச்சர் பதவியில் இருப்பவர் சட்டவிரோத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நாராயணசாமி கடிதத்தில் குறிப்பிட்ட விஷயங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என தெரிவித்துள்ள கிரண்பேடி, 13-ஆம் தேதிக்குள் பதில் கிடைக்காவிட்டால் போராட்டம் நடத்துவேன் என கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். எனினும், இதுதொடர்பாக விரிவான ஆலோசனை நடத்துவதற்காக வருகிற 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு தமது அலுவலகத்துக்கு வருமாறு நாராயணசாமிக்கு கிரண்பேடி அழைத்து விடுத்துள்ளார்.
அதேசமயம் கிரண்பேடி எழுதியுள்ள கடிதத்தை ஏற்க முடியாது எனக்கூறி, முதலமைச்சர் நாராயணசாமி போராட்டத்தை தொடர்கிறார். இரண்டாவது நாளாக தர்ணா போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தலைமைச் செயலாளரின் கோரிக்கையை ஏற்று அதிரடிப் படையினரும் புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளனர். அதேசமயம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். இதனால் புதுச்சேரியில் பரபரப்பான நிலை காணப்படுகிறது.