Published : 13,Feb 2019 07:11 AM
நாகர்கோவில் மற்றும் ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்வு

நாகர்கோவில் மற்றும் ஓசூர் நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
2019-20 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் கடந்த 11-ஆம் தேதி முதல் நடைப்பெற்று வருகிறது. மூன்றாம் நாளான இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நாகர்கோவில் மற்றும் ஓசூர் நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தபடுவதாற்கான மசோதாவை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இதனால் தமிழகத்தில் ஏற்கெனவே இருந்த 12 மாநகராட்சிகளின் எண்ணிக்கை தற்போது 14 மாநகராட்சிகளாக மாற உள்ளது.முன்னதாக நாகர்கோவிலில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எல்லை சீரமைப்பு பணிகள் முற்றிலும் நிறைவடைந்த பின்னர் நகராட்சியாக உள்ள நாகர்கோவில் மாநகராட்சியாக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று இந்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷணன் இந்தக் கோரிக்கையை விடுத்ததாக முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.