
தனது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் அரசிற்கு எதிரான தனது குரலையோ, எழுத்தையோ தடுத்து நிறுத்திவிட முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அன்னியச் செலவாணி விதிமீறல் புகாரில் கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியாகியிருந்தது. இந்நிலையில், அமலாக்கத்துறை அனுப்பியதாக கூறப்படும் நோட்டீஸ் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. அந்த நோட்டீஸ் கிடைத்தால் உரிய பதில் வழங்கப்படும். எனது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் அரசிற்கு எதிரான எனது குரலையோ, எழுத்தையோ தடுத்து நிறுத்திவிட முடியாது என்று அவர் தெரிவித்தார். நேற்று, அன்னியச் செலாவணி விதிமீறல் விவகாரத்தில் வாசன் ஹெல்த்கேர் நிறுவனத்திற்கும் கார்த்தி சிதம்பரத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.