Published : 09,Feb 2019 02:40 PM
“தாயகம் திரும்பியது மகிழ்ச்சி” அமெரிக்காவிலிருந்து திரும்பிய அருண் ஜெட்லி ட்வீட்

அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை செய்து கொண்ட மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி நாடு திரும்பினார், தாயகம் திரும்பியது மகிழ்ச்சியளிப்பதாக ஜெட்லி தன் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லி அண்மைக்காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். இதனால் கடந்த ஆண்டு அவர் சிகிச்சை எடுப்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு பதிலாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டார். பின்னர் ஜேட்லி திரும்பியதும் நிதித்துறை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோன்று கடந்த ஜனவரி 23ஆம் தேதி அருண் ஜேட்லி சிகிச்சைக்காக சென்றபோது அவரது நிதித்துறை மீண்டும் பியூஷ் கோயாலிடம் சென்றது. அத்துடன் இலக்காக இல்லாத மத்திய அமைச்சராக அருண் ஜேட்லி இருப்பார் என அறிவிக்கப்பட்டது. பியூஸ் கோயலும் இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார். அருண் ஜேட்லி சிகிச்சை பெற்று வந்த போதிலும், சமூக வலைத்தளங்களில் எப்போதும் போலவே கருத்துகளை பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில், அருண் ஜெட்லி சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பியுள்ளார். தாயகம் திரும்பியது மகிழ்ச்சியளிப்பதாக ஜெட்லி தன் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், அருண் ஜெட்லி தாயகம் திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தன்னுடைய ட்விட்டரில் கூறியுள்ளார்.