
எந்தவொரு அரசியல் பார்வை, நம்பிக்கைகளின் அடிப்படையில் முடிவுகளை நாங்கள் எடுப்பதில்லை என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.
உலக அளவில் முக்கியமான சமூக வலைத்தளங்களாக வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவை இருக்கின்றன. நடிகர், நடிகைகள் தொடங்கி பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வரை இந்தச் சமூக வலைத்தளங்களில் இயங்கி வருகின்றனர். இந்த ஒவ்வொரு சமூக வலைத்தளத்திற்கு கோடிக்கணக்கான பயன்பாட்டாளர்கள் உள்ளனர்.
அந்த வகையில் ட்விட்டர் என்பது மிகவும் முக்கியமான சமூக வலைத்தளமாக இருந்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் தங்களது எண்ணங்களை பதிவிட ட்விட்டர் ஒரு சிறந்த களமாக உள்ளது. ஒரு நடிகரின் படம், ட்ரெய்லர், டீசர் என எது ஒன்று வெளியாகும் போதும் அந்தச் செய்தி ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகிவிடும். அதேபோல், முக்கியமான அரசியல் நிகழ்வுகளும் பலவும் ட்விட்டரில் முதலிடம் பிடித்துவிடும்.
இது ஒருபுறம் இருக்க, பணம் கொடுத்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. ஃபேஸ்புக் மீது பயன்பாட்டாளர்களின் விவரங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், ட்விட்டர் மீது இந்தக் குற்றச்சாட்டு சமீபமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ட்விட்டர் இந்தியா தன்னுடைய பக்கத்தில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளது. “பல்வேறு தரப்பினர் கருத்துக்கள் வெளிப்பட வேண்டும், அவர்களது குரல்கள் ஒலிக்க வேண்டும் என்பதே ட்விட்டரின் சேவை. வெளிப்படைத் தன்மை, நம்பகத்தன்மை மற்றும் பாரபட்சமின்மை போன்ற கொள்கைகளை மேற்கொள்வதில் ட்விட்டர் உறுதி பூண்டுள்ளது.
எங்களது ட்விட்டர் விதிகளை அமல்படுத்த, உலக நிபுணத்துவம் வாய்ந்த சர்வதேசக் குழு உள்ளது. அதனால், ட்விட்டர் இந்தியா ஊழியர்கள் விதிமுறைகளை அமல்படுத்துவதில்லை. நியாயத்தையும், பாரபட்சமின்மையும் அவர்கள் உறுதி செய்வார்கள்.
உலகக்கின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 4வது பெரிய வளர்ந்து வளரும் பயன்பாட்டாளர்கள் அதிகமுள்ள நாடு இது. இந்திய வாடிக்கையாளர்களுக்கு நியாயமான தகவல்களை உறுதி செய்வதை தவிர எங்களுக்கு வேறு பணியில்லை. இந்த தேர்தல் சமயத்தில் அதற்காக தேசிய அளவிலான உரையாடல்களை உறுதி செய்வோம் ” என்று குறிப்பிட்டுள்ளது.