Published : 05,Feb 2019 06:29 AM
வரும் 8-ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 8ஆம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்துக்கு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் மார்ச் மாதம் அறிவிக்க இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுவிட்டதால், அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த சுழலில் அதிமுகவில் விருப்பமனு விநியோகம் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 8ஆம் தேதி நடைபெறும் என்று அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 8ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு கூட்டம் தொடங்கும் என அதிமுக தெரிவித்துள்ளது.
அந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வியூகம் பற்றியும், கூட்டணி குறித்தும், மாவட்டச் செயலாளர்களிடம் கருத்து கேட்கப்படும் எனத் தெரிகிறது. பகுதி மற்றும் வார்டு வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.மேலும் மக்களவைத் தேர்தலுக்கான அடுத்தகட்ட ஆயத்தப் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.