
தனது 35வது பிறந்தநாளை தனது திரைத்துறை நண்பர்களுடன் நடிகர் சிம்பு கேக் வெட்டி கொண்டாடினார்.
சிம்பு தனது 35வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதற்கிடையே அவர் நடிப்பில் உருவான ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டுள்ளது. அப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாகவும் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் விதமாகவும் சென்னை கிண்டியில் உள்ள ஒரு விடுதியில் சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கொண்டாட்டத்தில் நடிகர்கள் தனுஷ், மஹத், ஹரீஸ் கல்யாண், வைபவ், ஜெயம் ரவி, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா உள்ளிட்டோரும், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த், மேகா ஆகாஷ், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட நடிகைகளும் கலந்து கொண்டனர்.
STR என்று எழுதப்பட்ட கேக்கை வெட்டிய சிம்பு, நடிகர்கள் தனுஷ், ஜெயம் ரவி, யுவன் ஆகியோருக்கு ஊட்டினார். இந்தப் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சிம்புவின் பிறந்தநாளை அவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.